ஹெல்த் செக்கரெட்டரி பீலாவுக்கு ஒரு நியாயம்.. கமிஷ்னர் பிரகாசுக்கு ஒரு நியாயமா? கோட்டையில் வலுக்கும் ஜாதி லாபி

By Selva KathirFirst Published Jun 13, 2020, 11:09 AM IST
Highlights

சென்னையில் தற்போது வரை பிரகாஷ் முழு அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறார். இதற்கு காரணம் பிரகாஷ் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் முயற்சியால் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆக்கப்பட்டது தான் என்கிறார்கள்.

கொரோனா தடுப்பு பணிகளில் கூட ஜாதி ரீதியிலான லாபி தான் தமிழக அரசை ஆட்டிப்படைத்து வருவதாக கோட்டையில் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.

கடந்த ஏப்ரல் மாத மத்தி வரை தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருந்தது. திடீரென கொரோனா அதிகரிக்க காரணம் சென்னை கோயம்பேடு சந்தையில் உருவான புதிய கிளஸ்டர் தான். அந்த வகையில் சென்னையில் இருந்து தான் திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் கொரோனா கிடுகிடுவென உயர ஆரம்பித்ததது. சென்னையில் துவக்கத்திலேயே சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் கொரோனாவை சென்னையை தாண்ட விடாமல் செய்திருக்கலாம் என்கிற பேச்சும் அடிபட்டது. சென்னை கோயம்பேடு சென்று வந்த வியாபாரிகள் மூலமாகத்தான் சென்னை முழுவதும் கொரோனா பரவியது.

சென்னை கோயம்பேடு கொரோனாவின் கிளஸ்டராக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியான போது சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். கோயம்பேடு சந்தைக்கு முன்னாள் கமிஷ்னர் கார்த்திகேயன் பொறுப்பாளராக இருந்த நிலையில் அவர் அதனை கவனித்துக் கொள்வார் என்று மாநகராட்சி கமிஷ்னர் பிரகாஷ் அலட்சியம் காட்டியது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும்.

கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால்அங்கு வியாபாரிகள் செல்லக்கூடாது, அங்கிருந்துமற்ற பகுதிகளுக்கு வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்யக்கூடாது என்று மாநகராட்சி நடவடிக்கை எடுத்திருந்தால் வேறு வழியில்லாமல் கோயம்பேடு வியாபாரிகள் வேறு இடத்தில் கடைகளை மாற்ற ஒப்புக் கொண்டிருப்பார்கள், ஆனால் மாநகராட்சி ஆணையரும், கோயம்பேடு சந்தை பொறுப்பாளர் கார்த்திகேயனுடன் சேர்ந்து கொண்டு வியாபாரிகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது தான் கொரோனா கட்டுக்குள் வராமல் போனதற்கு காரணம் என்கிறார்கள்.

மேலும் கொரோனாவை தடுக்கிறேன் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உபயோகமாக பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள். மும்பையில் கொரோனா கட்டுக்கு அடங்காமல் சென்ற நிலையில் அங்கு மாநகராட்சி ஆணையர் மாற்றப்பட்டார். ஆனால் சென்னையில் தற்போது வரை பிரகாஷ் முழு அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறார். இதற்கு காரணம் பிரகாஷ் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் முயற்சியால் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆக்கப்பட்டது தான் என்கிறார்கள்.

மேலும் தற்போது கோட்டையில் பிரகாஷ் சார்ந்த கொங்கு மண்டல ஜாதி லாபி தான் எடுபடுகிறது எனவே அந்த லாபியை மீறி பிரகாஷை அவ்வளவு எளிதாக யாரும் எதுவும் செய்ய முடியாது என்கிறார்கள். அதே சமயம் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்ட நிலையில் அவர் தென் மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை ஜாதியை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு பெரிய அளவில் கோட்டையில் லாபி இல்லை என்கிறார்கள். ஜாதி, அமைச்சருக்கு வேண்டியவர் என்பதை எல்லாம் தாண்டி கொரோனாவை தடுக்க பிரகாஷ் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி என்பது வெட்ட வெளிச்சம். எனவே அவருக்கு பதில் வேறு ஒரு திறமையான அதிகாரியை நியமிக்க தமிழக அரசு தயங்குவது ஏன் என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுவருகின்றன.

click me!