சீன உற்பத்தியில் தரத்தை எதிர்பார்ப்பது நம்ம தப்புதான்! 24 ஆயிரம் ரேபிட் கருவிகளை திருப்பி அனுப்பும் தமிழக அரசு

By karthikeyan VFirst Published Apr 27, 2020, 8:14 PM IST
Highlights

24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் ஆணைப்படி தமிழக அரசு திருப்பியனுப்புகிறது. 
 

சீனாவில் உருவாகி உலகம் முழுதும் பேரழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் சமூக தொற்றாக பரவவில்லை. ஆனாலும் இதுவரை 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 886 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரிசோதனை பிசிஆர் கருவிகளில் செய்யப்பட்டுவருகிறது. அதில் பரிசோதனை முடிவுகள் கிடைக்க தாமதமாவதால், அதிகமானோருக்கு பரிசோதனை செய்வதை உறுதி செய்யும் விதமாக, ஒரு மணி நேரத்தில் முடிவு தெரியக்கூடிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை சீனாவிடம் இருந்து இந்தியா வாங்கியது. 

மத்திய அரசின் சார்பில் ஆர்டர் கொடுக்கப்பட்டது போக, மாநில அரசுகளும் தன்னிச்சையாக ரேபிட் டெஸ்ட் கருவிகளை ஆர்டர் செய்தன. அந்தவகையில், சீனாவிலிருந்து ரேபிட் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டன. தமிழகத்திற்கு மொத்தம் 36 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வழங்கப்பட்டன. 

ரேபிட் டெஸ்ட் கருவிகளை தமிழக அரசு என்ன விலைக்கு வாங்கியது என்று கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சி தலைவருக்கு, ஒரு கருவியை ரூ.600க்கு வாங்கியதாக தமிழக அரசு தெளிவுபடுத்தியது. ஆனால் தமிழ்நாட்டை விட குறைந்த விலைக்கு வாங்கிய மாநிலங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசு, அதிக விலைக்கு வாங்கிவிட்டதாக குற்றம்சாட்டினார் ஸ்டாலின். 

ஆனால் அந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை என்ன விலைக்கு வாங்கினோம் என்பது பிரச்னையல்ல. அந்த கருவி தரமானதாக இல்லை என்பதுதான் உண்மையான பிரச்னை. ரேபிட் டெஸ்ட் கருவிகள் தொடர்ச்சியாக தவறான முடிவுகளை காட்டியதையடுத்து, இந்தியா முழுவதும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவுறுத்தியது. 

இதையடுத்து அனைத்து மாநிலங்களும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்துவதை தவிர்த்தன. அந்த கருவிகள் கொள்முதல் செய்ததற்கு இன்னும் பணம் கொடுக்கவில்லை எனவும் ஐசிஎம்ஆர் தெரிவித்திருந்தது. 

தவறான முடிவுகளை காட்டும் தரமற்ற ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு ரூ.600ஆ என மீண்டும் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்நிலையில், அவருக்கு பதிலடி கொடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில், தமிழக அரசு வாங்கிய 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகளையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக ஆணைப்படி திருப்பியனுப்புவதாகவும் அதனால் தமிழ்நாட்டிற்கு எந்த நஷ்டமும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே செய்யப்பட்ட ஆர்டர்களும் ரத்து செய்யப்படுவதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனா ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிய பரிசோதனை கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் தரமானதாக இல்லையென ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் அவற்றை திருப்பியனுப்பின. இந்நிலையில், இந்தியாவும் அவற்றை திருப்பியனுப்பவுள்ளது. சீன பொருட்களில் தரத்தை எதிர்பார்ப்பது, உலக நாடுகளின் தவறு. 
 

click me!