இரத்த தானம் , கண் தானம் ,பிளாஸ்மா தானம் மூன்றிலும் தமிழகமே முதலிடம்: மார்த்தட்டும் சுகாதாரத்துறை அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Oct 6, 2020, 5:03 PM IST
Highlights

தமிழகத்தில் சோதனை அதிகமாக செய்வதால் பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொரோனா காரணத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு நிலையத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  "தேசிய தன்னார்வ ரத்த தான நாள்-2020"நிகழ்வில் ரத்த தான விழிப்புணர்வு பதாதைகளை வெளியிட்டு ரத்த பரிமாற்றம் குறித்த இணையவழி கருத்தரங்கை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனா காலத்தில் இரத்ததானதின் முக்கியத்துவம் குறித்து கருத்தரங்கு நடத்தப்பட்டது, இரத்த தானம் மிகவும் முக்கியமான தானம், பல்வேறு உயிர்களை காக்க இரத்த தானம் முக்கியம், இந்தியாவில் தமிழகம் இரத்த தானம் , கண் தானம் ,பிளாஸ்மா தானம் என்று அனைத்திலும் முதல் இடம் பெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது வரை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 405 நபர்கள் பிளாஸ்மா தானம் வழங்கி உள்ளனர், தமிழகத்தில் மொத்தம் 430 நபர்கள் வழங்கி உள்ளனர். 1 யுனிட் இரத்தத்தின் மூலமாக 3 உயிர்களை காக்க முடியும், அந்த வகையில் இந்த கொரோனா காலத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இரத்த தானம் வழங்கி உள்ளனர், இதன் மூலம் 1 லட்சத்து 4 ஆயிரம் நபர்களை காப்பாற்றி உள்ளோம். 

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நபர்கள் பிளாஸ்மா தானம் வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் வழங்கி உள்ளோம். சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்கள் 42 ஆக உயர்ந்துள்ளது குறித்து பேசிய அவர், சென்னையில் மிக அதிக அளவில் நோய் பரவல் இருந்தது, இதனால் சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுபடுத்தபட்டது ,தற்போது தொழில் அதிகமாக செய்ய கூடிய சேலம், கோயம்பத்தூர் கடலூர் போன்ற இடங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அதிகமாக கூட கூடிய இடங்களில் மட்டும் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தில் சோதனை அதிகமாக செய்வதால் பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொரோனா காரணத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அந்த இறப்பு விகிதத்தை 1% குறைவாக மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட்  இடஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார். இந்த வருடமே அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் இட ஒதுக்கீடு கிடைக்குமா என்பது ஆளுநர் ஒப்புதல் தரும் காலத்தை பொருத்தது.அரசு விரைந்து ஆளுநரின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுத்து வருகிறது. பின்னர் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் பணிபுரியும் இடங்கள் மற்றும் தேநீர் கடைகளில் ,சாலையோர கடைகளில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் உள்ளனர். பொதுமக்கள் அதிகமாக முக கவசம் பயன்படுத்த வேண்டும். அரசு சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்கள் மீது தண்டனை வழங்கினாலும் மக்களாக சமூக இடைவெளி கடைபிடிக்க தவறினால் பாதிப்பு அதிகமாகும் என எச்சரித்தார். 
 

click me!