நாட்டிலேயே பெண்போலீஸ் அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம்.. போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Feb 16, 2021, 10:48 AM IST
Highlights

நாட்டின் தலைநகர் டெல்லியை காட்டிலும் தமிழகத்தில் 6% பெண் காவலர்கள் கூடுதலாக உள்ளனர் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகளவில் அரங்கேறும்  உத்திரபிரதேசம் இந்த பட்டியலில் 15வது இடத்தில் உள்ளது.  

நாட்டிலேயே பெண்போலீஸ் அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம் தான் என போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு  நிகரானது தமிழக போலீஸ் என பல மாநிலங்கள் தமிழகத்தை வர்ணிப்பதை நாம் அறிவோம். அதேபோல் இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையங்கள் தமிழகத்தில் தான் உள்ளன என மத்திய அரசு பாராட்டியுள்ளது. சட்டம்-ஒழுங்கு சீராக பாதுகாத்து அமைதிப் பூங்காவாக தமிழகம் திகழ்வதுடன் முதலீட்டுக்கு உகந்த மாநிலம் எனவும்  முதலீட்டாளர்கள் மத்தியில் பெயர் பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த காவல்துறையினரின் எண்ணிக்கை 24.64 லட்சம். இதில் தமிழகத்தில் மட்டும் 1.36 லட்சம் பேர் உள்ளனர். இந்தியாவில் மொத்த காவல்  நிலையங்கள்  16 ஆயிரத்தை நெருங்குகிறது. இதில் இந்தியாவிலேயே முதல் இடமாக தமிழகத்தில்தான் 1,541  என அதிக எண்ணிக்கையிலான காவல் நிலையங்கள் உள்ளன. 

அதேபோல், பெண் காவலர்கள் அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம்தான் நாட்டில் மகளிர் காவல் நிலையங்களின் எண்ணிக்கை  613, ஆனால் இவற்றில் தமிழகத்தில் மட்டும் 203 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன, அதேபோல ஒரு சம்பவம் நடந்தால் அதன் மீது வேகமாக வழக்குப்பதிவு செய்து, விரைவாக குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கை எடுப்பதிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதுவரை குற்றம் தொடர்பான வழக்குகளில் 60 சதவீதம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதும் தமிழகத்தில்தான்.  இந்நிலையில் தேசிய போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் நாட்டிலுள்ள  ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை சதவீதம் பெண் காவலர்கள் உள்ளனர் என புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. அதன்படி 17.5 சதவீதம் மகளிர் காவலர்களை பெற்று தமிழகம் முதலிடம் வகிக்கிறது. முதல் ஐந்து இடங்களில் தமிழகம், பீகார், மகாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேஷ், டெல்லி ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

நாட்டின் தலைநகர் டெல்லியை காட்டிலும் தமிழகத்தில் 6% பெண் காவலர்கள் கூடுதலாக உள்ளனர் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகளவில் அரங்கேறும்  உத்திரபிரதேசம் இந்த பட்டியலில் 15வது இடத்தில் உள்ளது.  தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் பின்வருமாறு:- தமிழகம் 17.5 சதவீதம் பெண் போலீசாரை கொண்டுள்ளது, பீகார் 15.7 சதவீதம், மகாராஷ்டிரம் 12.9 சதவீதம், ஹிமாச்சல் பிரதேஷ் 12.9 சதவீதம், டெல்லி 11.5 சதவீதம், உத்தரகாண்ட் 11.5 சதவீதம், ஒடிசா  9.6 சதவீதம், ராஜஸ்தான் 9.3 சதவீதம், கேரளா 8.8%, பஞ்சாப் 8.2 சதவீதம், மேற்கு வங்கம் 7.9 சதவீதம், கர்நாடகா 6.7%,  ஹரியானா 7.4 சதவீதம், உத்திரபிரதேசம் 7.3%,  ஜார்க்கண்ட் 6.5%, அசாம் 6.2 சதவீதம்,  ச்சட்டிஸ்கர் 5.8%,  ஆந்திர பிரதேஷ் 5.6%,  மத்தியபிரதேச 5.3%, தெலங்கானா 4.1% , ஜம்மு-காஷ்மீர் 3.5% என ஒவ்வொரு மாநிலத்திலும் பெண் போலீசார் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவில் உள்ள மொத்த பெண்களின் எண்ணிக்கையில் 8 .98% பெண்கள் காவல்துறையில் பணியாற்றுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

click me!