மலிவான அரசியல் செய்கிறார் ஸ்டாலின்..! அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் தாக்கு

By karthikeyan VFirst Published Apr 20, 2020, 6:59 PM IST
Highlights

உலகமே எதிர்கொண்டிருக்கும் பேரிடர் கொரோனா. இப்படியொரு இக்கட்டான சூழலில் மலிவான அரசியல் செய்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டுவருகிறது. தடுப்பு பணிகள், சிகிச்சை பணிகள் என அனைத்திலுமே தமிழக அரசின் செயல்பாடுகள் துரிதமாகவும் சிறப்பாகவும் உள்ளன. 

கொரோனா தொற்று உறுதியானவர்களில், இதுவரை 457 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழக மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையின் மூலமாகவே இது சாத்தியமாகியுள்ளது. அதேபோலவே இதுவரை 1520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் 17 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் தமிழ்நாட்டில் 1% என்ற அளவிலேயே உள்ளது. 

சிகிச்சை பணிகளை போலவே தடுப்பு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கொரோனா தொற்றுள்ளவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து கண்காணித்து பரிசோதனை எடுப்பது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பது, பரிசோதிப்பது என தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் சில அரசு துறைகள் இணைந்து தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன.

அதேபோல பரிசோதனை எண்ணிக்கைகளும் கடந்த ஒரு வாரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனையை அதிகப்படுத்தும் விதமாக இதுவரை 36000 ரேபிட் டெஸ்ட் கருவிகளை தமிழ்நாடு வாங்கியுள்ளது. இன்னும் அதிகமான ரேபிட் டெஸ்ட் கருவிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறாக அரசு தரப்பில் கொரோனா தடுப்பு, சிகிச்சை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டாலும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாக தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்துவருகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்ளவில்லை என விமர்சித்துவந்த ஸ்டாலின், தற்போது ரேபிட் டெஸ்ட் கருவி விலை குறித்த சந்தேகத்தை எழுப்பி விமர்சித்துவருகிறார்.

எதிர்க்கட்சி தலைவரின் விமர்சனத்துக்கு முதல்வர் பழனிசாமி ஏற்கனவே பலமுறை பதிலடி கொடுத்துவிட்டார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் ஏற்கனவே பதிலடி கொடுத்திருக்கிறார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், மறுபடியும் ஸ்டாலின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்ப, மீண்டும் பதிலடி கொடுத்தார் விஜயபாஸ்கர்.

ஸ்டாலின் விமர்சனத்துக்கு பதிலளித்து  பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா ஒரு உலக பேரிடம். வல்லரசு நாடுகளே கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் தவித்துவருகின்றன. ஆனால் உலக சுகாதார அமைப்பு பாராட்டத்தக்க வகையில் இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு கொரோனா தடுப்பு பணிகளில் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. 

இப்படியொரு உலக பேரிடரை எதிர்கொண்டிருக்கும் நிலையில், அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல. வல்லரசு நாடுகளே தவித்துவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக எடுத்ததால் பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. அப்படியிருக்கையில், இந்த சூழலில் மலிவான அரசியல் செய்வதை எதிர்க்கட்சி தலைவர் தவிர்க்க வேண்டும். மாபெரும் தொற்று நோய் இது. மரண விஷயத்தில் மலிவாக அரசியல் செய்யக்கூடாது.

ரேபிட் டெஸ்ட் கருவிகளை மத்திய அரசு நிர்ணயித்த விலைக்கு தான் வாங்கியிருக்கிறோம். நம்மை விட அதிக விலை கொடுத்து ஆந்திர அரசு வாங்கியிருக்கிறது. ஆனால் ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவர், அதை விமர்சிக்கவில்லை. இங்கு மட்டும்தான் இந்த நிலை இருக்கிறது. இப்படியொரு சூழலில் எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்வது வேதனையளிக்கிறது என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
 

click me!