ஒருபோதும் அனுமதி கொடுத்துவிடாதீர்கள் முதல்வரே.. தமிழகம் பாலைவனமாகிடும்.. எடப்பாடி பழனிசாமி அதிரடி..!

By vinoth kumarFirst Published Jun 18, 2021, 1:22 PM IST
Highlights

 தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் பல திட்டங்களுக்கு வித்திட்டது திமுக எம்.பி.யும், மூத்த நிர்வாகியுமான டி.ஆர்.பாலுதான். ராஜஸ்தான் பாலைவனத்தில் மீத்தேன் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்த அப்போதைய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் டி.ஆர்.பாலு, இத்திட்டத்தை தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் செயல்படுத்த முடிவெடுத்தது.

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில்;- தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் பல திட்டங்களுக்கு வித்திட்டது திமுக எம்.பி.யும், மூத்த நிர்வாகியுமான டி.ஆர்.பாலுதான். ராஜஸ்தான் பாலைவனத்தில் மீத்தேன் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்த அப்போதைய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் டி.ஆர்.பாலு, இத்திட்டத்தை தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் செயல்படுத்த முடிவெடுத்து, 2010-ல் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றார். இதை அவரே தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். அது ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வெளி வந்திருக்கின்றன. திமுக தான் கொண்டுவந்தது என்பதே அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். 

அதேபோல, ஆழ்துளைக் கிணறு அமைத்து ஆய்வுப் பணி தொடங்க, 4 ஆண்டுகளுக்கு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு 2011-ம் ஆண்டு அனுமதி அளித்தது திமுக அரசுதான். அதுவும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வராக இருந்தபோது அவரது முன்னிலையில்தான் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

மேலும், தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் இசைவாணை முதன்முதலில் கடந்த2008-ல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திமுக ஆட்சிக் காலத்தில்தான் வழங்கப்பட்டது. இதேபோல், 2010-ம் ஆண்டு கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகியமாவட்டங்களில் 7 கிணறுகளுக்கும், 2011-ல் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 5 கிணறுகளுக்கும் திமுக ஆட்சியில்தான் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், 2014-ல் டெல்டா பகுதிகளில் நிலக்கரி படுகை அடிப்படையிலான மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகுறித்து ஆய்வு செய்ய நிபுணர்குழுவை ஜெயலலிதா அமைத்தார். பாதுகாக்கப்பட்ட காவிரிடெல்டா வேளாண் மண்டலத்துக்கான ஒரு தனிச் சட்டத்தை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து, அதை நிறைவேற்றியதால் காவிரி டெல்டா மாவட்டவிவசாயிகளைப் பாதுகாத்துள்ளோம்.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிணறுகளால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி ஓர் உயர்மட்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் வரை எந்தவிதமான ஆய்வுப் பணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று நான் முதல்வராக இருந்தபோது உத்தரவிட்டிருந்தேன். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு ஓஎன்ஜிசி கடிதம் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. இதற்கு தமிழக அரசின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

click me!