தமிழக அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையை பேச மறுத்து தனது சொந்த கருத்தை பேசிய நிலையில் அது சட்டப்பேரவை அவைக்குறிப்பில் நீக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த வீடியோவை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் அவை உரிமை மீறல் கொண்டுவரப்படவுள்ளது.
தமிழக அரசு - ஆளுநர் மோதல்
தமிழக சட்டப்பேரவையில் ஆண்டு தோறும் ஆளுநர் உரையோடு சட்டப்பேரவை கூட்டமானது தொடங்கும். அந்த வகையில் நேற்று ஆளுநர் ரவி சட்டப்பேரவைக்கு உரையாற்ற வந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பாக வரவேற்பு கொடுத்து சிவப்பு கம்பளத்தில் உரையாற்ற அழைத்து வந்தனர். இதனையடுத்து சட்டசபையில் ஆளுநர் உரையாற்ற தொடங்கினார். அப்போது தமிழக சட்டப்பேரவையில் ஆரம்பத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக கூறி தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை பேச மறுத்தார். இதனையடுத்து சட்டசபையில் இருந்தும் ஆளுநர் வெளியேறினார்.
ஆளுநர் மாளிகை விளக்கம்
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி தேசிய கீதத்துக்காக ஆளுநர் எழுந்தார். இருப்பினும், சபாநாயகர் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நிரல்களை பின்பற்றுவதற்குப் பதிலாக, ஆளுநருக்கு எதிராக அவதூறாகப் பேசினார். நாதுராம் கோட்சே மற்றும் பலரை ஆளுநர் பின்பற்றுவதாக சபாநாயகர் கூறினார். மேலும் சட்டப்பேரவையில் நடைபெற்ற சம்பவத்தின் வீடியோ தொகுப்பையும் வெளியிட்டார்.
ஆளுநர் மீது அவை உரிமை மீறல்.?
இதனிடையே தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி மற்றும் சபாநாயகர் அப்பாவு பேசிய பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் மாளிகை சட்டப்பேரவை தொகுப்பை வீடியோவாக வெளியிட்டது. இதனையடுத்து ஆளுநர் மீது அவை உரிமை மீறல் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை அவை உரிமை மீறல் கொண்டு வர இருப்பதாக தெரிகிறது. இதே போல கடந்த ஆண்டும் தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியதை மொபைல் போனில் இருந்து எடுக்கப்பட்டு வெளியிட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாகவும் அவை உரிமை மீறல் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்
அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி திடீர் ராஜினாமா செய்ததற்கு பின்னனி என்ன.? வெளியான முக்கிய தகவல்