பேருந்துகளை இயக்கி பிற மாவட்டங்களில் கொரோனாவை பரப்பிய தமிழக அரசு.. முதல்வரை கடுமையாக சாடும் எல்.முருகன்..!

By vinoth kumarFirst Published May 30, 2021, 4:55 PM IST
Highlights

பிஎஸ்பிபி பள்ளி விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தினர் மீது குற்றம்சாட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பிஎஸ்பிபி பள்ளி விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தினர் மீது குற்றம்சாட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பாஜக அரசு 2வது முறையாக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இன்று தமிழகம் முழுவதும்பாஜக கட்சியினர் சேவை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  எல்.முருகன்;- தமிழக பாஜக சார்பில் பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாகவும் பாஜக அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் அதில் குறிப்பாக உஜ்வாலா திட்டம், கிசான் சம்மான் நிதித் திட்டம் போன்ற உன்னதமான பல திட்டங்கள் விவசாயிகளுக்கும், பெண்களுக்கும் அனைத்து தரப்பினருக்கும் கொண்டுவரப்பட்டதாக பெருமிதம் தெரிவித்தார். 

மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைச்சர் சேகர்பாபு பேசியது தவறு என்றும் ஓட்டுப் போட்டவர்கள் போடாதவர்கள் என அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் எனக்கூறினார். மேலும் சென்னையில் தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் பிற மாவட்டங்களில் கொரோனா பரவலுக்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை தான் காரணம். ஒரே நாளில் அனைத்து கடைகளும் திறந்து விட்டு பிற மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கி இங்கு பரவிய நோய் தொற்றினை பிற மாவட்டங்களிலும் பரவ செய்து விட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் சென்னைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ஏன் பிற மாவட்டங்களுக்கு கொடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். 

மேலும், மத்திய அரசு கொடுத்த தடுப்பூசிகளை மாநில அரசு சரியாக பயன்படுத்தவில்லை என்றும் ஆனாலும் மத்திய அரசு மாநில அரசுக்கு தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கொண்டு வரப்படும் போது அதனை கடுமையாக விமர்சனம் செய்தவர்கள் இன்று தடுப்பூசி பற்றாக்குறை என விமர்சனம் செய்கிறார்கள் என்று கடுமையாக சாடினார். சென்னை பிஎஸ்பிபி விவகாரத்தில் தவறு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாது.  இதே போல் அரசு பள்ளியில் ஒரு குற்றச்சாட்டு எழும் பொழுது அந்த குற்றச்சாட்டிற்கு மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பொறுப்பு ஏற்பாரா என்றும் கேள்வி எழுப்பினார். 

click me!