
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிய மக்களுக்கு, இன்று அரசு அறிவித்திருக்கும் முடிவு வேதனையிலும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இத்தனைகாலம் போராடி, 13 உயிர்களை பலி கொடுத்து இன்று இப்போராட்டத்திற்கான வெற்றி கிடைத்திருக்கிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்த துணைமுதல்வர், அதன் பிறகு முதல்வருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தின் முடிவில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் படி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல்வைக்கும் படி, அரசு அளித்திருக்கும் இந்த ஆணையை வரவேற்றிருக்கும் பொதுமக்கள், தங்கள் மகிழ்ச்சியை எல்லோரிடம் பகிர்ந்துவருகின்றனர். தூத்துக்குடியில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், அப்பகுதி மக்கள் தங்கள் போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, தமிழர்களின் போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி தான், ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவு. இந்த முடிவையே உச்ச நீதி மன்றமும் தீர்ப்பாக தரவேண்டும் என்பது தான், இப்போது அனைத்து தமிழ்மக்கள் மனதிலும் இருக்கும் ஒரே எண்ணம்.