தமிழகத்தில் திட்டமிட்டப்படி தேர்தல்... தேர்தல் பணிகளை தொடங்க ஆயத்தமாகும் தேர்தல் ஆணையம்!

By Asianet TamilFirst Published Jun 1, 2020, 8:45 AM IST
Highlights

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழகம், மேற்குவங்காளம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி மாநிலங்களுக்கான தேர்தல் பணிகளை ஆணையம் தொடங்க உள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைமை தேர்தல் ஆணையர், பிற இரு தேர்தல் ஆணையர்கள், மாநில தேர்தல் அதிகாரிகளோடு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர். 

கொரோனாவால் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்று பேசப்பட்டுவரும் சூழலில், தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸால் இந்தியா பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிலிருந்து எப்போது மீளும் என்பதை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு நவம்பரில் பீகாரிலும், அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத்  தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், கொரோனா வைரஸின் தாக்கம் நீடிக்கும்பட்சத்தில் தேர்தல் 6 மாதங்கள் வரை தள்ளிப்போகும் என்ற பேச்சுகள் உலா வரத்தொடங்கின. தமிழ்நாட்டில் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்று சிலர் தொடர்ந்து பேசிவருகிறார்கள். 


ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பீகாரில் நடைபெற உள்ள தேர்தலுக்கான பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல்  பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்த  தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கொரோனா ஊரடங்கால் சில தினங்களுக்கு முன்புதான் இந்தியா திரும்ப முடிந்தது. தற்போது 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்துள்ளார். இந்தத் தனிமை காலம் முடிந்த பிறகு வழக்கமாக தேர்தல் ஆணைய பணிகளில் ஈடுபடுவார் என ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் பணிக்கு திரும்பிய பிறகு பீகார் தேர்தல் பணியைத் துரிதப்படுத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. அதனையடுத்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழகம், மேற்குவங்காளம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி மாநிலங்களுக்கான தேர்தல் பணிகளை ஆணையம் தொடங்க உள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைமை தேர்தல் ஆணையர், பிற இரு தேர்தல் ஆணையர்கள், மாநில தேர்தல் அதிகாரிகளோடு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழகத்தில் ஜூலை முதல் வாரத்தில் தமிழக தேர்தல் அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் ஆகியோருடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரிக்கு முன்பாக தேர்தல் முன்னேற்பாடுகளை முடித்துவிட தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

click me!