பிரசாந்த் கிஷோருடன் இபிஎஸ் ரகசிய ஆலோசனை... 2021-ல் மீண்டும் முதல்வராக திட்டம்..!

By Asianet TamilFirst Published Jun 18, 2019, 11:38 AM IST
Highlights

டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரசாந்த் கிஷோரை, ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரசாந்த் கிஷோரை, ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல்வராக இருந்தாலும், அதிமுக,வை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார்.  ஆனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளார் என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், இருவருக்கும் இடையே, கட்சி தலைமையை கைப்பற்றுவதில், கடும் போட்டி நிலவுகிறது. இந்த நேரத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்றார். அங்கு, பிரசாந்த் கிஷோரை சந்தித்து, ரகசிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. 

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, அரசியல் கட்சிகளுக்கு, வியூகங்கள் அமைத்து கொடுப்பதில், பிரசாந்த் கிஷோர் நிபுணத்துவம் பெற்றவர். கடந்த 2014 மக்களவை தேர்தலில், பிரதமர் மோடி வெற்றி பெறுவதற்கான வியூகம் வகுத்து கொடுத்தார். அதன்படி அந்த தேர்தலில், மோடி வெற்றி பெற்றார். அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக, அவர், 'ஐபெக்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

சமீபத்தில், ஆந்திரா சட்டமன்ற தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆலோசனைகள் வழங்கினார். அவரும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளார். அடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், கிஷோரை அழைத்து பேசி உள்ளார். 

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியும், பிரசாந்த் கிஷோரை சந்தித்துள்ளார். அப்போது, அதிமுக தலைமை பதவியை பெறுவதற்கும், 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வர் ஆவதற்கும், தேவையான வியூகம் வகுத்து தரும்படி கேட்டுள்ளார். அதற்கான ஒப்பந்தம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரசாந்த் கிஷோருடனான சந்திப்புக்கு, அதிமுக முன்னாள் எம்.பி. ரபி பெர்னார்ட் ஏற்பாடு செய்துள்ளார். 

click me!