
விவசாயிகளின் தொடர் போராட்டத்தை உண்ணாவிரதம் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர்மந்தர் மைதானத்தில் விவசாயிகள் கடந்த 41 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்கொலை மிரட்டல், "பாம்பு , எலி" கறி உண்ணுதல், ஒப்பாரி, மண்சோறு உண்ணுதல், சிறுநீர் அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தங்களது போராட்டத்தை விவசாயிகள் முன்வைத்தனர்.
பல நாட்களாக போராடும் தங்களை பிரதமர் மோடி சந்திக்காமல் அலட்சியம் செய்து வருவதாக குற்றஞ்சாட்டிய விவசாயிகள், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் விவசாயிகளை சந்திக்காதது வேதனை அளிப்பதாகக் கூறியிருந்தனர். இந்தச் சூழலில் டெல்லி சென்ற முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையுடன் விவசாயிகளை இன்று காலை சந்தித்து பேசினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி, விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தை உண்ணாவிரதம் என்று குறிப்பிட்டார். இதனை கவனித்த தம்பிதுரை, விவசாயிகள் மேற்கொண்டது உண்ணாவிரதம் அல்ல, போராட்டம் என்று காதோரம் கிசுகிசுக்க,
பின்னர் அதனை திருத்தி போராட்டம் என்று கூறினார். இது மட்டுமல்ல பல கேள்விகளுக்கும் தம்பிதுரை சொன்ன பதிலையே எடப்பாடி பேசினார். விவசாயிகள் மேற்கொண்டது போரட்டம் என்று தெரியாதவர், எப்படி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்ற மீம்ஸூகளும் இணையத்தில் ரெக்கை கட்டிப் பறக்கிறது.