
டெல்லியில் விவசாயிகளை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…போராட்டம் கைவிடப்படுமா?
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.விவசாயிகளின் கோரிக்கைளை பிரதமரிடம் எடுத்துக் கூறுவதாக முதலமைச்சர் உறுதி அளித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 41 ஆவது நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக மத்திய நிதி அமைச்சகத்தின் பதில் கடிதம் கிடைக்கப்பெற்றால் போராட்டத்தை கைவிடுவது பற்றி அறிவிக்கப்படும் என்று கூறிய அவர்கள், இது வரை பதில் கிடைக்காததால் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த விவசாயிகளை தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். மத்திய அமைச்சர்களும் விவசாயிகளை சந்தித்தனர்.ஆனால் அவர்களது கோரிக்கைகள் குறித்து எந்த உத்தரவாதமும் கொடுக்கப்படவில்லை.
இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை மறுநாள் திமுக தலைமையில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
அதே நேரத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை விவசாயிகளை சந்திக்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தனர். இதையடுத்து டெல்லியில் இன்று நடைபெறவுள்ள நிதி அயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை விவசாயிகளை சந்தித்துப் பேசினார்.
அப்போது விவசாயிகள் தரப்பில் அய்யாகண்ணு பல்வேறு கோரிக்கைகள் அடங்கி மனு ஒன்றை அளித்தார். இதைத் தொடர்ந்து விவசாயிகளிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைப்பதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு உடனடியாக தமிழகம் திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை இன்று முடித்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.