ஜம்முணு முடிஞ்சது வெளி நாட்டு பயணம்... வெளிநாட்டு பயணம் தொடரும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பு!

By Asianet TamilFirst Published Sep 10, 2019, 7:32 AM IST
Highlights

தமிழகம் வளர்ச்சி பாதையில் தொடர்ந்து பயணிக்கும். உலகமெங்கும் தமிழர்களை ஒன்றிணைக்க ‘யாதும் ஊரே’ என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. எனது வெளி நாட்டு அரசுப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இரண்டு வார கால வெளி நாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார். தன்னுடைய வெளி நாட்டு பயணம் வெற்றி அடைந்ததாக முதல்வர் தெரிவித்திருக்கிறார். 
தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், வெளிநாடுகளில் உள்ள தொழில்நுட்பங்களை தமிழகத்துக்குக் கொண்டுவரவும் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆகஸ் 28 அன்று தனது பயணத்தை தொடங்கிய முதல்வர் முதலில் இங்கிலாந்து, பின்னர் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கிருந்து இந்தியா திரும்பும் வழியில் துபாய்க்கும் சென்றார். முதல்வருடன் அமைச்சர்கள், அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் என குழுவே வெளி நாடு சென்றிருந்தது.
இறுதிகட்டமாக துபாயில் நேற்று நடந்த வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தின் மூலம் தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு செய்ய முதல்வர் முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதையடுத்து தனது இரண்டு வார கால சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அங்கே குழுமியிருந்த செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “ வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் எங்களுக்கு அளித்த வரவேற்பு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. தமிழகத்தில் எல்லா துறைகளிலும் தொழில் முதலீடு செய்ய பலரும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். வெளி நாட்டு அரசு முறை பயணம் தொடரும். 
தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவது மிக அவசியம். துபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதன்மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழகம் வளர்ச்சி பாதையில் தொடர்ந்து பயணிக்கும். உலகமெங்கும் தமிழர்களை ஒன்றிணைக்க ‘யாதும் ஊரே’ என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. எனது வெளி நாட்டு அரசுப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது” என்று தெரிவித்தார்.

click me!