கொரோனா லாக்டவுன்: ஏழை, எளிய மக்களுக்கு உதவ நிதியுதவி செய்யுங்க.. முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

By karthikeyan VFirst Published Mar 27, 2020, 3:40 PM IST
Highlights

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களுக்கு உதவும் விதமாக முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு தாமாக முன்வந்து நிதியுதவி அளிக்குமாறு தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 800ஐ நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. நெருங்கிவிட்டது. கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், இந்தியாவில் இன்னும் சமூக தொற்றாக அது பரவவில்லை. அதற்குள்ளாக ஊரடங்கு அமல்படுத்தி, மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதால், சமூக பரவல் தடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தொழில் முனைவோர், மாத ஊதிய ஊழியர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழை, எளிய, ஆதரவற்ற மக்களுக்கு எந்தவித சிரமுமின்றி உணவு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. அதேபோல வருவாய் இழப்பு ஏற்பட்டோரை கருத்தில் கொண்டு நிதி சார்ந்த திட்டங்களும் அறிவிக்கப்பட்டுவருகின்றன. 

இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கு திரைப்பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும் நிதியுதவி அளித்துவருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி, சச்சின் டெண்டுல்கர், பிவி சிந்து, இர்ஃபான் பதான், யூசுஃப் பதான், தோனி ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர்.

தமிழகத்தில் ஏழை, எளிய, ஆதரவற்ற மக்களுக்கு உணவு கிடைப்பதையும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்துகொடுப்பதையும் உறுதி செய்ய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதுடன் அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறது. 

ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு தேவையானதை போதுமான அளவிற்கு செய்துகொடுக்க, மத்திய, மாநில அரசுகளின் பேரிடர் நிவாரண நிதி மட்டும் போதாது. எனவே நிதியுதவி செய்ய முடிந்தோர், தங்களால் முடிந்த நிதியுதவியை முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு அளிக்குமாறு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிவாரண நிதியாக வழங்கப்படும் இந்த தொகைக்கு வருமான வரிவிலக்கு உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். எனவே திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.

 நிதி வழங்க முன்வருவோர் ஐ.ஓ.பி. சேமிப்பு கணக்கு எண்- 117201000000070     ஐ.எஃப்.எஸ்.சி கோட் - I0BA0001172-ல்  CMPRF PAN - AAAGC0038F என்ற எண்ணை குறிப்பிட்டு பணத்தை செலுத்தலாம்.

click me!