கொரோனா அச்சுறுத்தல்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி அவசர கடிதம்

By karthikeyan VFirst Published Mar 28, 2020, 3:42 PM IST
Highlights

கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகிவரும் நிலையில், தற்போதைய நிலையில், ரூ.9000 கோடியை தமிழகத்திற்கு ஒதுக்கி உதவ வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
 

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா சமூகத்தொற்றாக பரவவில்லை. எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 900ஐ எட்டிவிட்டது. பலியானோரின் எண்ணிக்கை 20ஆக உள்ளது. 

இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய 2 மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 150ஐ கடந்துவிட்டது. கேரளாவில் 200ஐ நெருங்கிவிட்டது. மகாராஷ்டிராவில் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் தீவிரமாக உள்ளது. 

தமிழ்நாட்டிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனாவிற்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்காக மொத்தம் 15 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சையும் தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

கொரோனாவை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு சார்பில், ரூ.3250 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன், தமிழ்நாட்டிற்கு ரூ.4000 கோடி நிதியை ஒதுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது மீண்டும், ரூ.9000 கோடி நிதி ஒதுக்கக்கோரி கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி இன்று எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் தற்போதைய சூழலை சமாளிக்க ரூ.9000 கோடியை ஒதுக்க வேண்டும். சவாலான இந்த தருணத்தில் நாட்டின் நலன் கருதி பிரதமர் மோடி இந்த கோரிக்கையை ஏற்க வேண்டும் என முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
 

click me!