நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு மோடி தந்த வரம்... சொல்வது தமிழக பாஜக துணைத் தலைவர்தான்..!

By Asianet Tamil  |  First Published Oct 21, 2020, 8:44 PM IST

நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு மோடி அரசு தந்த ஒரு வரம் என்று தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
 


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாஜக சார்பில் வேளாண் சட்ட திருத்த மசோதா குறித்த கலந்தாய்வு கூட்டமும் கருத்து பரிமாற்றக் கருத்தரங்கமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பாஜகவின் துணைத்தலைவர்கள் விபி துரைசாமி, அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு வி.பி.துரைசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “வேளாண் சட்டங்கள் குறித்து திமுகவும் காங்கிரஸ் கட்சியும் பொய்யான குற்றச்சாட்டுக்களை மக்களிடம் பரப்பி வருகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளின் வயலில் இறங்கி மிரட்டுவதை யாராவது நிரூபித்துவிட்டால், எந்த நேரத்திலும் எங்கேயும் நானும் அண்ணாமலையும் அவர்களோடு நேரடி விவாதம் செய்ய தயாராக இருக்கிறோம்.
நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு மோடி அரசு தந்த ஒரு வரம். அதன் காரணமாகத்தான் தேனி சிலுவார்பட்டியை சேர்ந்த ஆடு மேய்ப்பவரின் மகன் 675 மதிப்பெண் பெற்று சாதித்தார். அவரால் திமுகவினர் நடத்தும் மருத்துவக் கல்லூரியில் ஒரு கோடி பணம் செலுத்தி மருத்துவ படிப்பை படிக்க முடியுமா? இது போட்டி நிறைந்த உலகம். இதில் முறையான பயிற்சியும் உழைப்பும் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். நானும்கூடத்தான் ஐபிஎஸ் தேர்வு எழுதினேன், அண்ணாமலையும் எழுதினார். பயிற்சியும் முயற்சியும் இருந்தால் அவர் வெற்றி பெற்றார். நான் முயற்சி செய்யவில்லை. அதனால் தோல்வி அடைந்தேன்” என வி.பி.துரைசாமி தெரிவித்தார்.

click me!