
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் பந்த் நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் மட்டும் படுதோல்வி அடைந்தது. விஷம் போல் ஏறி வரும் பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கு எதிராக நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களையும் ராகுல் காந்தியே நேரடியாக தொலைபேசியில் அழைத்து பேசியிருந்தார்.
ஆனாலும் கூட தமிழகத்தில் முழு அடைப்பு நடைபெறவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான அடித்தளம் கிடையாது. ஆனால் தி.மு.கவிற்கு உண்டு. பெட்ரோல் – டீசல் விலை உயர்வு போன்ற மிக முக்கியமான பிரச்சனைக்கு நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு என்று ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் ஸ்டாலின் எங்கும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஏன் கனிமொழி, துரைமுருகன் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களும் கூட ஆர்பாட்டத்தில் பங்கேற்கவில்லை.
இத்தனைக்கும் கடந்த சில நாட்களாகவே பா.ஜ.கவை ஸ்டாலின் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். அப்படி இருந்தும் இந்த முழு அடைப்பு வெற்றி அடையாமல் போனதற்கு தி.மு.க தங்கள் முதுகில் குத்தியது தான் காரணம் என்று காங்கிரஸ் தமிழக தலைவர்கள் கருதுகிறார்கள். ஸ்டாலின் நினைத்திருந்தால் தங்கள் மாவட்டச் செயலாளர்களை அழைத்து முழு அடைப்பை வெற்றி பெறச் செய்யுமாறு கூறியிருக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் மத்திய அரசுக்கு எதிரான இந்த போராட்டம் தமிழகத்தில் பிசுபிசுக்க வேண்டும் என்கிற ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் தி.மு.க நடந்து கொண்டதாகவும் காங்கிரஸ் தமிழக தலைவர்கள் சந்தேகிக்கிறார்கள். அறிக்கை, பேட்டிகள் மூலம் பா.ஜ.கவை எதிர்க்கும் ஸ்டாலின் களம் என்று வந்துவிட்டால் நழுவுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். எது எப்படியோ தமிழகத்தில் முழு அடைப்பு தோல்வி அடைந்துவிட்டதால் பா.ஜ.கவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.