சசிகலா பற்றி பேசினால்... மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு வந்த கொலை மிரட்டல்... சசிகலா மீது போலீஸில் புகார்!

By Asianet TamilFirst Published Jun 9, 2021, 8:50 PM IST
Highlights

சசிகலா பற்றிப் பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்துவிடுவோம் என மிரட்டல்கள் வருவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 

சசிகலாவைப் பற்றி விமர்சித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அண்மையில் பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில், “இந்த இயக்கத்தில் சசிகலா எங்கே இருந்தார் என்பதே தெரியாது. அவருக்கும், அதிமுகவின் சரித்திரத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவர் ஜெயலலிதாவின் வீட்டிலே, அவருக்கு உதவியாளராக வந்தார். அவ்வளவுதான். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் இப்போது என்ன வேஷம் போட்டாலும், என்ன நாடகம் போட்டாலும் எதுவும் நடக்காது. கருவாடுகூட மீனாகிவிடலாம். ஆனால், அதிமுகவில் சசிகலா ஒருநாளும் உறுப்பினராக முடியாது.
ஒன்றரைக் கோடி அதிமுக தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் இந்த இயக்கத்தை அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. ஒரு சசிகலா அல்ல. ஆயிரம் சசிகலா வந்தாலும் இந்த இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சசிகலாவைப் பற்றி விமர்சித்து பேசியதற்காக சி.வி.சண்முகத்துக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை சி.வி.சண்முகமே திண்டிவனத்தில் உள்ள ரோஷணை காவல் நிலையத்துக்கு நேரடியாகச் சென்று அளித்துள்ளார். 
அந்தப் புகாரில், “கடந்த 7-ஆம் தேதி சசிகலா குறித்து பேட்டி அளித்தேன். அதற்கு சசிகலா நேரடியாக பதிலளிக்காமல், அடியாட்களை வைத்து செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆபாசமாக, அநாகரிகமாக பேசியும் பதிவிட்டும் வருகின்றனர். என்னை அச்சுறுத்தும் வகையில் என்னுடைய செல்போனுக்குக் கொலை மிரட்டல் விடுத்தும் வருகிறார்கள். இன்றுவரை சுமார் 500 போன் அழைப்புகள் வந்துள்ளன. இன்னும் செல்போன், சமூக ஊடகங்கள் மூலம் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.
சசிகலா பற்றிப் பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்துவிடுவோம் என மிரட்டும் தொனியில் பேசுகிறார்கள். இதற்கு சசிகலாவின் தூண்டுதலே காரணம். எனவே, கொலை மிரட்டல் விடுக்கவும், ஆபாசமாகவும் பேசக் காரணமாக இருந்த சசிகலா மீதும், என் செல்போனுக்கு வந்த அழைப்புகளில் பேசிய மர்ம நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார்.

click me!