
நரேந்திர மோடி பிரதமர் பொறுப்பேற்று இன்றோடு நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன. மே 26ஆம் தேதியான 2014ஆம் ஆண்டின் இதே நாளில்தான் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்களை எல்லாம் அழைத்து இந்தியாவின் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
நரேந்திரமோடி பிரதமாக பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளாக மத்திய அரசு பல்வேறு விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளது.
முதலில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.95 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது, 2018-19 பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்கான ஒதுக்கீடு 62 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு ரூ.4 ஆயிரத்து 700 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது, ஆண்டுக்கு ரூ.12 மட்டும் பிரீமியமாக செலுத்தி ரூ.2 லட்சம் பெறும் வகையில் பிரதமரின் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டது என்று பல்வேறு விஷயங்களை மோடி அரசு தனது சாதனைகளாகத் தெரிவித்துள்ளது. பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களையும், பணமதிப்பழிப்பு மூலம் கறுப்புப் பண ஒழிப்பையும் செய்ததாக பெருமையாக சொல்லிக் கொள்கிறது மத்திய அரசு.
தனது அரசைப் பற்றி தானே இப்படிச் சொல்லிக்கொண்டாலும் மக்கள் என்ன சொல்லுகிறார்கள்?
டெல்லியைச் சேர்ந்த சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையம், லோக்நீதி என்ற ஒப்பீட்டு ஜனநாயகத்துக்கான ஆய்வு நிறுவனம் ஆகியவை ABP செய்தி நிறுவனத்துக்காக இந்திய அளவில் மிகப்பெரிய ஆய்வை நடத்தினர்.
இந்த ஆய்வில்தான் மத்திய மோடி அரசுக்கு மக்கள் வழங்கியிருக்கும் மதிப்பெண் பற்றியும் தெளிவாகத் தெரிகிறது.
கடந்த 5 மாதங்களில் மத்திய அரசுக்கான மக்களின் ஆதரவு 5 சதவிகிதம் குறைந்திருக்கிறது என்பதுதான் மக்களின் மனநிலை. ஆய்வு சொல்லும் விவரங்களைப் பார்ப்போம்.
மூட் ஆஃப் த நேஷன் அதாவது நான்கு ஆண்டு கால மோடி அரசு பற்றி தேசத்தின் மனது எப்படி இருக்கிறது? ஆய்வு செய்யச் சென்றபோது, அரசின் மீதான மக்களின் நம்பிக்கையில் படிப்படியான சதவிகிதச் சரிவுகளைக் கண்கூடாக காண நேர்கிறது.
இந்த ஆய்வு தொடங்கியபோது அதாவது கடந்த 2017 மே மாதம், ‘மத்திய அரசுக்கு ஆதரவாக அடுத்த தேர்தலிலும் வாக்களிப்போம்’ என்று 39 சதவிகிதம் மக்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.
அதேநேரம் மீண்டும் 8 மாதங்கள் கழித்து சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையம், லோக்நீதி என்ற ஒப்பீட்டு ஜனநாயகத்துக்கான ஆய்வு நிறுவனம் ஆகியவை தேசம் தழுவிய அளவில் இந்த வருடம் ஜனவரி மாதம் நடத்தியபோது மத்திய அரசை ஆதரிப்பதாக 34 சதவிகிதம் பேர் கருத்து தெரிவித்தார்கள். அதாவது 8 மாத இடைவெளியில் 5 சதவிகிதம் பேர் இந்த அரசை எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.ஆனால், இது கடந்த ஜனவரி மாதத்தின் நிலை.
3வது முறையாகச் சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையம், லோக்நீதி என்ற ஒப்பீட்டு ஜனநாயகத்துக்கான ஆய்வு நிறுவனம் ஆகியவை கடந்த ஏப்ரல் முதல் மே வரை மீண்டும் 19 மாநிலங்களில் ஆய்வு நடத்தியிருக்கிறார்கள்.
கடந்த ஜனவரி மாதத்தில் 34 சதவிகிதம் ஆக இருந்த பாஜக அரசின் ஆதரவு நிலை ஐந்து மாதங்கள் கழித்து இந்த ஏப்ரல்- மே மாதங்களில் 32 சதவிகிதம் ஆக இறங்குமுகம் கண்டிருக்கிறது. அதாவது 2018 ஜனவரி மாதத்தில் இருந்து 2018 மே மாதம் வரை மத்திய அரசுக்கான மக்களின் ஆதரவு 2 சதவிகிதம் குறைந்திருக்கிறது.
சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையம், லோக்நீதி என்ற ஒப்பீட்டு ஜனநாயகத்துக்கான ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வுப்படி 2017 மாதத்துக்கும் 2018 மே மாதத்துக்கும் இடையே மத்திய அரசுக்கான மக்கள் ஆதரவு 7 சதவிகிதம் சரிவு கண்டிருக்கிறது.
“இது வெறும் சதவிகிதக் கணக்கு அல்ல. மத்திய அரசைப் பற்றி ஒவ்வொரு தனி மனிதனிடமும் 25 நிமிடங்கள் ஆற அமர்ந்து பேசி அவர்களின் நல்லது கெட்டதுகளைப் பற்றி விரிவாக அலசி ஆராய்ந்த பின் எடுக்கப்பட்ட ஆய்வு’’ என்கிறார்கள் லோக் நீதி அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
கடந்த ஒரு வருடத்தில் 7 சதவிகிதம் மக்களிடம் செல்வாக்கை இழந்து இப்போது 32 சதவிகிதம் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் மத்திய பாஜக அரசு, அடுத்து வரும் காலங்களில் மீண்டும் செல்வாக்கை இழக்கவே அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறது இந்த ஆய்வு.
இதே ரீதியிலான சதவிகிதச் சரிவுகள் தொடரும் பட்சத்தில் இன்னும் சில மாதங்களில் மத்திய பாஜக அரசுக்கான ஆதரவு என்பது 30 சதவிகிதம் ஆக தேய்ந்துவிடும் என்று கணிக்கிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்ட களப் புலனாய்வாளர்கள்.
உண்மையிலேயே மோடி அலை உருவாகவில்லை மோடிக்கு எதிரான அலையே உருவாகிக் கொண்டிருக்கிறது.