காதல் சின்னம் தாஜ்மஹாலை காணச் செல்கிறார் யோகி ஆதித்யநாத்... சர்ச்சைகளுக்கு வைப்பாரா முற்றுப்புள்ளி!

First Published Oct 17, 2017, 6:26 PM IST
Highlights
Taj Mahal was built by blood sweat of Indian labourers says UP CM Yogi Adityanath


 
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சுற்றிச் சுழன்று அடிக்கின்றன சர்ச்சைகள். அதுவும், அவர் தாஜ்மகாலை சுற்றுலாத் தல மேம்படுத்தும் பட்டியலில் இருந்து நீக்கி அறிவித்த போது, மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில்,  தொடர் சர்ச்சைகளால் எழுந்துள்ள சூழலை சரிக்கட்ட, தாம் வரும் அக்.26 ஆம் தேதி அங்குச் சென்று பார்வையிட உள்ளதாக இன்று கூறினார். 

செவ்வாய்க்கிழமை இன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்படி, சுற்றுலா பயணிகளின் முதல் தேர்வாக உள்ள 17ம் நூற்றாண்டுக் கட்டடமான தாஜ்மஹாலைப் பார்க்கவுள்ளேன். அதை யார் கட்டியது, எதற்காகக் கட்டியது போன்ற விஷயங்களுக்குள் புக விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளாராம்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. அவருக்கும் தாஜ்மஹாலுக்கும் ஏக ராசிப் பொருத்தம்தான். அதுமட்டுமின்றி, அண்மையில்  மீரட் நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அம்மாநில பாஜக.,  எம்எல்ஏ சங்கீத் சோம், 'தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தில் படிந்த ஒரு கறை' என்று  பேசினார். அது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இப்படி,  உபி., பாஜக அரசை எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் சுற்றிச் சுற்றி அடிக்கின்றன. சமூக வலைத்தளங்களில் ஏகத்துக்கும் திட்டித் தீர்க்கிறார்கள். இவை எல்லாம் குறித்து மௌனமாக இருந்து வந்த யோகி ஆதித்யநாத், இப்போது வாய் திறந்திருக்கிறார்.  இதுபற்றி செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் அவர் கூறியபோது,  தாஜ்மஹால் யாரால் கட்டப்பட்டது, எதற்காகக் கட்டப்பட்டது என்பதெல்லாம் முக்கியமல்ல. அது இந்தியத் தொழிலாளர்களின் ரத்ததாலும் வியர்வையாலும் கட்டப்பட்டது. அது, சுற்றுலாத்துறை கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. அங்கே வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தருவதிலும், பாதுகாப்பை உறுதி செய்வத்லும்  முன்னுரிமை கொடுக்கப்படும்... என்று கூறியுள்ளார்.

எனவே, இந்த இடங்களை ஆய்வு செய்ய வரும் 26ஆம் தேதி தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, பதேபூர் சிக்ரி உள்ளிட்ட நினைவிடங்களுக்கு யோகி ஆதித்யநாத் செல்லப் போவதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

அண்மையில் மேம்படுத்தப்படும் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் தாஜ்மஹால் விடுபட்டுப் போனது. அதனால் எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, சுற்றுலாத் துறை அமைச்சர் ரீதா பகுஹுனா ஜோஷி, தாஜ்மஹால் மாநில அரசுக்கும் நாட்டுக்கும் முக்கியமான ஒரு சுற்றுலா தலம் என்று கூறினார். 

click me!