
பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை எழுப்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையொட்டி நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேட்டியளித்தபோது, பெண் நிருபர் ஒருவரது கன்னத்தை அவர் தட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தன் செயலுக்காக கவர்னர் மன்னிப்பு கேட்டார். இதனை சுட்டிக்காட்டிய பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர் சமூக வலைதளத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டார்.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. இது சம்பந்தமாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து எஸ்.வி. சேகரை போலீசார் கைது செய்யக்கூடும் என தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.
முதலில் உச்சநீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியது. ஆனால் பின்னர் உச்சநீதிமன்றம் அவருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்தது. இதையடுத்து அவர் தலைமறைவானார்.
பெயருக்குத்தான் தலைமறைவானால் என்று செய்திகள் வந்தாலும், அவர் சென்னையில் பல விழாககளில் கலந்து கொண்டு வருகிறார். மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில் கலந்துகொண்டார்.
தமிக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எஸ்.வி.சேகருக்கு உறவினர் என்பதால் போலீஸ் அவரை கைது செய்ய பயப்படுகிறது எனவும் தகவல்கள் பரப்பப்பட்டன.
இந்நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜர் ஆனார்இதையொட்டி சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எஸ்.வி.சேகர் ஆஜராகும்போது அசம்பாவிதம் நடக்காமல் இருக்க 100 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.