
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்ற விமானம் 14 நிமிடங்கள் தொடர்பை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று முன்தினம் மாலை இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஐஎப்சி 31 ரக விமானத்தில் புறப்பட்டார். மதியம் 2 மணியளவில் அந்த விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது.
தென்னாப்பிரிக்கா செல்லும் வழியில் மொரிஷியஸ் நாட்டில் அதிகாரிகளை சந்திக்க சுஷ்மா ஸ்வராஜ் திட்டமிட்டிருந்தார். அதன்படி விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வான் எல்லையை கடந்தது. இதை சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு மையம் உறுதி செய்தது.
அதன்பின், மொரிஷியஸ் கடல் பகுதிக்குள் விமானம் நுழைந்த நிலையில், மாலை 4.44 மனிக்கு மொரிஷியஸ் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்துடன் விமானம், தொடர்பை இழந்தது. அதனால் பரபரப்பு ஏற்பட்டது. மொரிஷியஸ் அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். உடனடியாக டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தந்தனர்.
பொதுவாக கடல் பகுதிக்கு மேல் விமானம் செல்லும்போது தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், குறைந்தது அரைமணி நேரம் வரை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் காத்திருப்பார்கள். ஆனால் மொரிஷியஸ் அதிகாரிகள், 14 நிமிடங்கள் தொடர்பு கிடைக்காத நிலையில் எச்சரிக்கை மணியை அழுத்தியதால் பதற்றமும் பரபரப்பும் அதிகரித்தது.
அதன்பின், திருவனந்தபுரம், டெல்லி, சென்னை, மொரிஷியஸ் அதிகாரிகள் விமானத்தின் நிலையை அறிய தொடர்ந்து முயற்சி மேற்கொண்டனர். பிறகு 4.58 மணிக்கு மொரிஷியஸ் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்துடன் விமானம் தொடர்பு கிடைத்தது. அதன் பிறகுதான் அதிகாரிகள் நிம்மதியடைந்தனர். பிறகு திட்டமிட்டபடி மொரிஷியஸ் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. அங்கு அதிகாரிகளை சந்தித்த சுஷ்மா, திட்டமிட்டபடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்.