
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா,சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும், மற்ற மூவருக்கும் தலா 10 கோடி ரூபாயும் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஆனால் இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் அவர்கள் 4 பேரையும் பெங்களூரு உயர்நீதிமன்றம் விடுவித்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
நம்பர் 1 குற்றவாளியாக கருதப்படும் ஜெயலலிதா மறைந்து விட்ட நிலையில் அந்த வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள் உடனடியாக 3 பேரும் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பின் போது ஊழலுக்கு எதிராக நீதிபதிகள் சாட்டையை கையில் எடுத்து விளாசியுள்ளனர்.
ஜெயலலிதா குறித்து தீர்ப்பின் பல இடங்களில் நீதிபதிகள் மிகவும் கடுமை காட்டியுள்ளனர். நீதிபதி அமிதவ ராய், சமுதாயத்துக்கு சேவை செய்வதாக உறுதி மொழி எடுத்துக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களின் நலனுக்காக செயல்படுவது, அவர்கள் மீது சமுதாயம் வைத்திருக்கும் நம்பிக்கையை கெடுப்பது மட்டுமின்றி ,அரசியல் சட்டப்படி அவர்கள் எடுத்துக் கொண்ட உறுதி மொழிக்கு துரோகம் விளைவிப்பதாகும் என குறிப்பிட்டுள்ளார்.
சமுகத்தில் ஊழல் கொடூரமானது,அது சமூகத்தை அரித்து அழிக்கும் நோயைப் போன்றது எனவும், அதை சமுதாயத்திலிருந்து முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும் அமிதவ ராய் தெரிவித்தார்.
அதேபோன்று சசிகலா மீதும் நீதிபதிகள் கடுமையான விமர்சனத்தை வைத்திருந்தனர். ஜெயலலிதாவின் சொத்துக்களை பறிக்க வேண்டும் என்பதற்காகவே சசிகலா அவருடன் போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்தார் என்றும் நீதிபதிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.