மக்களே நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது.. எடப்பாடிக்கு எதிராக கமல்ஹாசன் காட்டமான ட்வீட்..!

By vinoth kumarFirst Published May 15, 2020, 3:26 PM IST
Highlights

மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடைகள், கடந்த 7ம் தேதி திறக்கப்பட்டு 2 நாட்கள் மது விற்பனை நடைபெற்றது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்தது. கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனிடையே, இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மதிமுக, பாமக, மக்கள் நீதி மய்யம், சீமான், திருமாவளவன், மக்கள் அதிகாரம், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கடைகளை மூடும்படி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கமல்ஹாசன் டுவிட்டரில்:- உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத் தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது என்று பதிவிட்டுள்ளார்.

click me!