அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு.

By Ezhilarasan BabuFirst Published Aug 27, 2020, 4:06 PM IST
Highlights

சென்னையில்  25,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கோரிக்கைப் பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. அப்பேரணியின்  போதே அன்றைய தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.  இது குறித்து அக்கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம்:- 

அருந்ததியர் மக்களுக்கு மூன்று சதமான உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வெளியிட்டுள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்பதுடன் இதன் மூலம் அருந்ததியர் மக்களது கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழகத்தில் பட்டியலின மக்களில் ஒரு பகுதியினராக உள்ள அருந்ததிய சமூகப் பிரிவினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்களுக்கான உரிய ஒதுக்கீட்டை பெறமுடியாத நிலை இருந்து வந்தது. மார்க்சி  ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழகம் முழுவதும் மேற்கொண்ட கள ஆய்வு இதனை பகிர ங்கமாக வெளிப்படுத்தியது .இந்த நியாயத்தை வலியுறுத்தும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2006 செப்டம்பர் 17ஆம் தேதி அன்று விருதுநகரில் அருந்ததியர் மக்களின் உள் இட ஒதுக்கீடு கோரிக்கை மாநாட்டை நடத்தியது. 

விருதுநகரை தொடர்ந்து திருநெல்வேலி, திண்டுக்கல், சாயல்குடி, அவிநாசி, சங்ககிரி, புதுச்சேரி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கோரிக்கை மாநாடுகள் நடைபெற்றன.தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி சென்னையில்  25,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கோரிக்கைப் பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. அப்பேரணியின்  போதே அன்றைய தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச்செயலாளர் என். வரதராஜன்  தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை கொள்கை ரீதியாக ஏற்பதாக தமிழக முதல்வர் அறிவித்தார். தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதியரசர் திரு.ஜனார்த்தனன் குழுவை அமைத்து முழு விவரங்களையும் பரிசீலித்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். 

அக்குழுவும் இக்கோரிக்கைகளின் நியாயத்தை அங்கீகரித்து முதல்வருக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட்ட அனைத்து கட்சிக்கூட்டத்தில் அங்கீகாரமும் பெறப்பட்டது.  இந்த அனைத்து க்கட்சி கூட்டத்திற்கு பிறகு, 2009ம் ஆண்டு அருந்ததிய மக்களுக்கு 3 சதமான உள்ஒதுக்கீடு செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கினை ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்திரவிட்ட நிலையில் மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் உள்ஒதுக்கீடு செல்லும் எனவும், மாநில அரசுக்கு அதற்கான அதிகாரம் உள்ளது எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் இப்போது கிடைத்துள்ள வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கது என சுட்டிக்காட்டுகிறோம். இந்த வெற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்திய தொடர்ச்சியான  போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். என அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

click me!