
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கை கிடைக்காததால்தான் அச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விளக்கமளித்துள்ளார்.
கடந்த மே 22ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், பிரதமர் மோடி இதுதொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கை கிடைக்காததால் தான் பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்கவில்லை. துப்பாக்கிச் சூட்டில் இறந்த 13 பேரின் பெயர்கள், அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. அவர்கள் பாமர மக்களா, விடுதலைப் புலிகளா, நக்சலைட்டுகளா அல்லது பயங்கரவாதிகளா என்பது தெரியவேண்டும் என தெரிவித்தார்.
சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து, போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.