ஆன்மீக அரசியல் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு அதனை எதிர்கொள்ள எண்ணினால் வெந்துபோக நேரிடும் என்பதை நடிகர் ரஜினிகாந்த் உணர வேண்டும் என்று திமுகவின் முரசொலி நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக முரசொலி நாளிதழ் 'ஆன்மீக அரசியலா?' என்ற தலைப்பில் விமர்சனம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அரசியல் களத்தில் முழுமூச்சாக இறங்குமுன் ரஜினிகாந்த், ஆழம் பார்க்க அடியெடுத்து வைத்த முதல் அடியிலேயே சறுக்கி விழுந்துள்ளார். அவரது தூத்துக்குடி விஜயம், அதைத் தொடர்ந்து அவரது பேட்டி, பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் ஆத்திரத்தில் வெடித்து இவை எல்லாமே அவரது நிலைகுலைந்த தன்மையை வெளிக்காட்டுவதாகவே இருந்தது.
ஆன்மீக அரசியல் நடத்தப்போவதாக அறிவித்த அவரது ஆன்மீகம் கேள்விக்குறியாகி விட்டது. யாரோ ஒருவர் இயக்க, அதன்படி இயங்கி வெற்றி பெறுவது சினிமாவில் சாத்தியமாகலாம். ஆனால் அரசியலில் அது இயலாத ஒன்று என்பதை அவரது தூத்துக்குடி விஜயமும் அதன் விளைவுகளும் அவருக்குத் தெளிவாக்கியிருக்கும் என நம்புகிறோம்.
தூத்துக்குடி துப்பாக்கி பிரயோகம் குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்த கருத்துக்கு முற்றிலும் மாறாக ஒரு கருத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதையும், அனைத்துக்கும் போராட்டங்கள் கூடாது என்று தூத்துக்குடியில் பேசும் அவர், வரவிருக்கும் தனது படத்தில் அனைத்துக்கும் போராடுவோம் என்கிறார். இவையல்லாம் சுட்டிக்காட்டப்பட்டு சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. இப்படி மாற்றி மாற்றிப் பேசுவதும், செயல்படுவதும்தான் ஆன்மீக அரசியலா என்பதை ரஜினி தெளிவாக்க வேண்டும்
நான் ஒரு முறை சொன்னால்... நூறு முறை சொன்ன மாதிரி என்று திரைப்படங்களில் பஞ்ச் டையலாக் பேசிய ரஜினிதான், சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என கருத்து தெரிவித்துள்ளார் ரஜினி. அப்படி கேள்வி எழுப்பியிருப்பது எந்த ரஜினி தெரியுமா? விரைவில் வர இருக்கும் தனது படமான காலாவில் அனைத்துக்கும் போராடுவோம், புரட்சி உருவாக்கப் போராடுவோம்என பாடி நடித்துவிட்டு நிழாலில் ஒன்று நிஜத்தில் வேறு ஒன்று என செயல்படுவதுதான் ஆன்மீக அரசியலா? ரஜினி தெளிவாக்க வேண்டும் அல்லது தெளிவாக வேண்டும்.
எல்லோருக்கும் நல்ல கதாநாயகனாக விளங்கியவர், இன்று பலருக்கும் எதிராக வில்லனாக விமர்சிக்கப்படுகிறார். அரசியல் உமிழும் வெப்பங்களைத் தாங்கும் பக்குவத்தை ஏற்றிட உடல் உரம் மட்டுமின்றி, உள்ள உரமும் தேவை. ஆன்மீக அரசியல் என்ற போர்வை போர்த்திக் கொண்டு, அதனை எதிர்கொள்ள எண்ணினால் வெந்துபோக நேரிடும் என்பதை ரஜினி உணர வேண்டும என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.