
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் துப்பாக்கிச்சூட்டுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் வரை சட்டப்பேரவையை புறக்கணிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த புறக்கணிப்பைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில திமுகவினர் போட்டி சட்டமன்றப் பேரவை நடத்தியது.
அதிமுகவுக்கு எதிராக கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரியும் அடக்கம். அப்போது, கருணாஸ், தற்போதுள்ள அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். மேலும், ஜெயலலிதா இருந்திருந்தால் தான் அமைச்சராகி இருப்பேன் என்றும் கூறியிருந்தார்.
போட்டி சட்டமன்றத்தில் பேசிய எம்.எல்.ஏ. கருணாசை விமர்சிக்கும் வகையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில், லொடுக்கு பாண்டிகளுக்கு சுளுக்கு காத்திருக்கு என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இரட்டை இலை சின்னத்தாலும், அதிமுக தொண்டர்களின் ஆதரவாலும் வெற்றி பெற்ற மாற்றுக்கட்சியைச் சேர்ந்த சிலர், நன்றி மறந்து திமுக நடத்திய மாதிரி சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் ஜெயலலிதாவின் முகத்துக்காக ஓட்டுப்போட்ட மக்கள், அணி மாறியவர்களை இனி தொகுதிக்குள் விடமாட்டார்கள் என்று கூறியுள்ளது.
அதிமுக அவர்களை மன்னித்து விடலாம் என்றும், சட்டப்படி தண்டித்து விடலாம் என்றே ஆனாலும், வாக்களித்த மக்கள் னன்றி மறந்தவர்களுக்கு உரிய பாடத்தை உணர்த்துவார்கள் என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.