
ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியில்லாதவர், ரஜினியை அரசியலுக்கு பாஜக அழைக்கவில்லை அப்படி சொல்வதெல்லாம் பழைய கதை அவன் அரசியலுக்கு வரவே மாட்டான் என ரஜினியை கீழ் தரமாக விமர்சித்துள்ளார் சுப்பிரமணியசாமி.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது, தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுப்போயிருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அன்புமணி ராமதாஸ், சீமான், வேல்முருகன் போன்றோர் ரஜினி நடிப்பதுடன் நிறுத்திக்கொள்ளட்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, ரஜினி படிப்பறிவில்லாதவர் என்றும், மோசடி பேர்வழி, 420 என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அரசியலுக்கு வரும் தருகுதியும் நடிகர் ரஜினிகாந்துக்கு இல்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் ஒரு பெரிய பட்டிமன்றமே நடந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் ஊடகங்கள், அவரது வீட்டு வாசலில் நின்று கொண்டு, அவரது அரசியல் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இந்த நிலையில் ரஜினி குறித்து பல்வேறு செய்திகள் வெளி வருகின்றன.
இன்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த், பிரதமரை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து என்பது பழைய காலம் என்றார். சசிகலாவைக் கூடத்தான் மோடி சந்தித்தார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியில்லாதவர் என்று சு.சுவாமி கூறினார். நடிகர் ரஜினிகாந்த் குறித்து, சுப்பிரமணியன் சுவாமி ஒருமையில் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.