யார் அந்த கவிஞர்..? கருணாநிதி பற்றி சுப.வீரப்பாண்டியனின் உருக்கமான பதிவு...!

First Published Aug 7, 2018, 3:23 PM IST
Highlights

சமீபத்தில் பிரபல பத்திரிக்கையில், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்... சுப.வீரபாண்டியன்.
 

சமீபத்தில் பிரபல பத்திரிக்கையில், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்... சுப.வீரபாண்டியன்.

இதில் அவர் கூறியுள்ளது "கடந்த 2012 ஆம் ஆண்டு டெசோ மாநாடு கூடவிருந்த நேரம். ஏறத்தாழ 20 நாள்கள் தலைவரின் அருகிலேயே இருந்து, அவர் கொடுத்த மாநாட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். ஒருநாள், "மாநாட்டில் ஓர் இசைத்தட்டு வெளியிடலாமே ?" என்றார் தலைவர். நாளும் "வெளியிடலாம் என்றேன்.

"யார் யாரிடம் பாடல்கள் கேட்கலாம் ? சொல் என்று என்னிடம் கேட்க. அதற்கு நான் வைரமுத்து, கவிதைப்பித்தன், பா.விஜய், என்று தொடங்கி வரிசையாகப் பெயர்களைச் சொன்னேன். "இவ்வளவு பேர் வேண்டாம். 

ஐந்தாறு பேர் போதும். மேலும் ரமேஷ் பிரபாவிடம் (அப்போது அவர் கலைஞர் தொலைக்காட்சியில் நிர்வாக இயக்குனர்) போய் பேசு, என்று கூறி யாரை இசையமைக்கச் சொல்லலாம், யார் யாரைப் பாடச் சொல்லலாம் என்பதையெல்லாம் முடிவு செய்து, இன்று மாலை என்னிடம் இறுதி பட்டியலைக் கொடு" என்று கூறினார்.

அவர் சொன்னது போல, மாலையில் இரு பட்டியலைக் கொடுத்தேன். ஆறு கவிஞர்களின் பெயர்கள் அதில் இருந்தன. படித்துவிட்டு, "இன்னொருவரிடமும் பாடல் கேட்டிருக்கலாமே" என்றார். "யாரிடம், யார் அந்த இன்னொரு கவிஞர் என்று பணிவாக நான் எழுப்பிய கேள்விக்கு, சிரித்து கொண்டே, "அப்படியானால் என்னை நீ கவிஞராக ஏற்றுக்கொள்ளவில்லையா?" என்றார்.

எனக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. "அப்படி இல்லை. உங்களைப் பார்த்துத்தானே நாங்கள் எல்லாம் எழுதவே கற்றோம். உங்களுக்கு இருக்கிற வேலைகளுக்கிடையே, நேரம் இருக்குமோ என்று நினைத்துதான்..." என்று சொல்லிவிட்டு, "நீங்கள் எழுதிக் கொடுத்தால், அது பெரிய மகிழ்ச்சி" என்றேன். ஒன்றும் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டார்.

அடுத்த நாள் அறிவாலயம் வந்தபோது, மகிழுந்திலிருந்து இறங்கும்போதே, என்னைப் பார்த்து, "கவிஞர்கள் என்ன சொன்னார்கள்? எப்போதும் பாடல் தருவார்கள்?" என்று கேட்டார். 

"எல்லோரும் இன்னும் இரண்டு மூன்று நாள்களில் தருவதாகச் சொல்லியுள்ளனர்" என்றேன். "அப்படியா, அப்படியானால் இந்த முதல் பாட்டை வாங்கிக்கொள்" என்று சொல்லி, இரண்டு தாள்களைக் கொடுத்தார். 'இருட்டறையில் உள்ளதடா ஈழம்' எனத் தொடங்கும் அந்த பாடல் அதில் இருந்தது.

பின் என்னை பார்த்தா கவிதை எழுத நேரமில்லாதவன் என்று நீ நினைத்தாய்? என்று கேட்பது போல புன்னகையை என்னிடம் உதிர்த்து சென்றார்... என்று நெகிழ்ச்சியுடன் நினைவுகளை பகிர்ந்துள்ளார் சுப.வீரபாண்டியன். 
 

click me!