இ-பாஸ்க்கு எதிராக வலுக்கிறது போராட்டம்..!! லஞ்ச ஊழலை அதிகப்படுத்தியுள்ளதாக சரமாரி குற்றச்சாட்டு..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 8, 2020, 12:25 PM IST
Highlights

 ஆனால் மக்கள் ஞாயமான காரணங்களுக்கு கூட இ-பாஸ் பெற முடியவில்லை, இ பாஸ் என்பது லஞ்ச ஊழலை அதிகப்படுத்தியுள்ளது.

இ-பாஸ் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் மாநில குழு கூட்டம் 7 ஆம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில்  இற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அச்சம்மேளனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகத்தில் பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக சுமார் 30 லட்சம் மோட்டார், டூவீலர்கள் வாழ்வாதாரம் இழந்து கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கொரோனா நிவாரணமாக அரசு வழங்கிய 2000 மற்றும்  அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களும் பெரும்பகுதியான தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே கொரோனா நிவாரண நிதியாக மாதம் ஒன்றுக்கு ரூபாய் 7,500 வீதம் அனைத்து மோட்டார் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தோம். இதுவரை கண்டு கொள்ளாத நிலையே நீடிக்கிறது.

எனவே அரசு தாமதமின்றி நிவாரண நிதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தற்போது ஊரடங்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பயணிகள் பேருந்து தவிர ஆட்டோ, டாக்சி, கால் டாக்சி, சரக்கு வாகனங்கள் இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் அரசின் அறிவிப்பால் எவ்வித பலனுமில்லை. டாக்சி கால்டாக்சி சுற்றுலா வாகனங்கள் போன்றவை மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளது. ஆனால் மக்கள் ஞாயமான காரணங்களுக்கு கூட இ-பாஸ் பெற முடியவில்லை, இ பாஸ் என்பது லஞ்ச ஊழலை அதிகப்படுத்தியுள்ளது. சாதாரண மக்களின் இ-பாஸ் பெற முடியாத நிலையில், வாடகை வாகனங்களும் இயங்க முடியாத சூழ்நிலையே உள்ளது. எனவே பாஸ் நடைமுறையை மாநில அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும், பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்குவதற்கு சாலை வரி செலுத்தவேண்டும், மோட்டார் வாகன சட்டப்படி ஒரு வாகனம் 10 நாட்களுக்கு மேல் இயங்க முடியாத நிலை ஏற்பட்டால், வாகன வரி இயங்காத காலத்திற்கு ரத்து செய்யப்பட வேண்டும். 

2020 மார்ச் 24-ஆம் தேதி முதல் மே 18 முடிய வாகனங்களை முற்றிலும் இயக்கக் கூடாது என அரசு தடை விதித்த நிலையில், சாலை வரி விதிவிலக்கு அளித்து திருப்பி வழங்கப்பட வேண்டும். ஆனால் அரசு அடுத்த தவணைக்கான வரியை கட்ட வேண்டுமென நிர்பந்தம் செய்கிறது, கடந்த நான்கு மாதங்களாக எவ்வித வருமானமும் இன்றி இருக்கும் நிலையில், அரசு, வாகனம் ஓடாத காலத்திற்கான சாலை வரியை ரத்து செய்வதுடன். வாகனங்கள் இயல்பாக ஓடும் வரை வாகன வரியை ரத்து செய்ய வேண்டும். 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள், அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுத்தான் இயங்கி வருகின்றன. செப்டம்பர் மாதம் வரை மத்திய ரிசர்வ் வங்கி தவணைத் தொகை கட்டுவதை தள்ளிவைத்துள்ளது. ஆனால் அதையும் மீறி சில நிதி நிறுவனங்கள் தவணைத் தொகையை செலுத்த நிர்ப்பந்தித்து வருகின்றன.  தவணைத் தொகை கட்டாத மாதங்களுக்கும் அபராத வட்டி உட்பட கணக்கிட்டு அசல் தொகை சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

எனவே வாகனங்கள் ஓடாத மாதங்களுக்குரிய வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும், தவணை வசூலிப்பதை தள்ளிவைக்க வேண்டும், அதேபோல் உலகச் சந்தையில் பெட்ரோலியம் விலை குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. இது மோட்டார் விலை மிகக் கடுமையாக பாதித்துள்ளது. எனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கைவிட வேண்டும், சில மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்துள்ளது. அதுபோல் தமிழக அரசும் குறைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் குடும்பத்துடன் கோரிக்கை அளிக்கும் போராட்டத்தை நடத்துவது என முடிவு  செய்யப்பட்டுள்ளது. அனைத்து மோட்டார் தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

click me!