கட்டணம் வசூல் குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை.. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர பகிரங்க எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jul 31, 2021, 1:37 PM IST
Highlights

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை வெறும் 23 மாணவர்கள் மட்டுமே மதிப்பெண்ணில் திருப்தி இல்லை எனக் கூறி மறுதேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் எனவும், அதேநேரத்தில் தனித்தேர்வர்கள் 45 ஆயிரத்து 654 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்றும், அதில் 313 மாற்றுத்திறனாளிகள் அடங்குவர் என்றும் அவர் கூறினார். 

பள்ளிகளை திறப்பது குறித்து மருத்துவ  வல்லுனர்களுடன் ஆலோசித்து, பின்னர் பெற்றோர்களிடம் அது குறித்து கருத்து கேட்ட பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். அதேபோல் நீதிமன்ற உத்தரவை மீறி தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகார்கள் வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். தமிழகத்தில் கொரோனா  இரண்டாவது அலை கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து வந்த நிலையில், திடீரென மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதை தடுப்பதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு, முழு மூச்சுடன் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது. 

மறுப்பக்கம்  மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் என முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளநிலையில்,  மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு எழுதுக இயக்கம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் எழுதிய 100 புத்தகங்களை வெளியிட்டார். அதை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:  கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் 3 மாநிலங்களில் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  ஆனால் கொரோனா நோய் தடுப்பு மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி அதன் பிறகு பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். 

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை வெறும் 23 மாணவர்கள் மட்டுமே மதிப்பெண்ணில் திருப்தி இல்லை எனக் கூறி மறுதேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் எனவும், அதேநேரத்தில் தனித்தேர்வர்கள் 45 ஆயிரத்து 654 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்றும், அதில் 313 மாற்றுத்திறனாளிகள் அடங்குவர் என்றும் அவர் கூறினார். தற்போது நோய் தொற்று காலம் என்பதால் அவர்களுக்கும் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். அதேபோல பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும் கூட தனியார் பள்ளிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், தனியார் பள்ளிகளின் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ஆதாவது பொருளாதாரம் பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடம் இருந்து 75 சதவீதமும், பாதிக்கப்படாத பெற்றோர்களிடம் இருந்து 85 சதவீதமும் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஆனால் தனியார் பள்ளிகள் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில் அது தொடர்பாக புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ஆசிரியருக்கு குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது என்ற அவர், விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றார். அதே நேரத்தில் ஆசிரியர்  தகுதித் தேர்வு நேரடியாகவும் அல்லது ஆன்லைன் மூலமாகவும் நடத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் கூறினார்.
 

click me!