
கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அமைச்சர் இவ்வாறு கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் திமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏற விடக்கூடாது என பாஜக அதிமுக பகிரத முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. ஆனால் மக்களை கவரும் வகையிலான வாக்குறுதிகளைக் கூறி திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதே மிகவும் கவர்ச்சிகரமான அறிவிப்பாக இருந்தது என்றே சொல்லலாம் அதேபோல் ஆட்சிக்கு வந்த பின்னர் 110 விதியின் கீழ் கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு செய்தார். அதற்கான அதிகாரபூர்வ அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டது.
ஆனால் எதிர்க்கட்சிகள் நகைக்கடனை ஏன் இன்னும் தள்ளுபடி செய்யவில்லை என கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றன. ஆனால் நகை கடன் தள்ளுபடிக்கு உரிய தகுதியான நபர்களை கண்டறிவதற்கான பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. நகை கடன் பெற்றவர்களின் பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை கணக்கு எண், வாடிக்கையாளர்களின் தகவல் என51 விதமான தகவல்களை சேகரித்து அரசு யாரெல்லாம் நகை கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் என்பதையும் அறிவித்துள்ளது. அதாவது நகைக்கடன் வழங்கப்பட்டதில் பல்வேறு விதிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய நிபந்தனையும் விதிக்கப்பட்டன. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் நகைக்கடன் பெற்றிருப்பவர்கள், முன்னதாக பயிர் கடன் பெற்றவர்கள், வெவ்வேறு வகைகளில் ஐந்து சவரனுக்கு மேல் நகை கடன் பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களுக்கான இறுதி பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பயனாளிகள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில் அது ஒட்டப்படும் என கூறினார். மேலும், ஜனவரி 31ம் தேதி 2021ம் ஆண்டு வரை உள்ள நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டதாக கூறிய அவர், இதற்குப் பின் தற்போது வரை அந்த நகைகளுக்கு செலுத்த வேண்டிய வட்டியை அரசே செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நகை கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவர்களாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளதாகவும்,தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க கூடிய பட்சத்தில் ஆய்வு செய்து அவர்களுக்கான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அமைச்சர் உறுதிபட கூறினார்.