காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர் பதவி ஒதுக்கீடு? இன்று மாலை வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு..!

By manimegalai aFirst Published Mar 2, 2022, 4:39 PM IST
Highlights

கூட்டணி கட்சிகளுக்கு மேயர்,துணை மேயர் பதவி இடங்கள் ஒதுக்கீடு செய்ய திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மிகப் பெரிய அளவிலான வெற்றியை திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் பெற்றுள்ளது.21 மாநகராட்சியை கைப்பற்றிய திமுக, 132 நகராட்சிகளையும் 455 பேரூராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு  மேயர், துணை மேயர் பதவிகள், நகராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நேற்று அமைச்சர் கே.என் நேரு இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி  நிர்வாகிகள் கலந்து கொண்டு பதவி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அப்போது தங்கள் விருப்பப்படும் பதவியிடங்களின் பட்டியலை கூட்டணி கட்சியினர் கொடுத்தனர். இதனையடுத்து கட்சிகளின் செல்வாக்கு மற்றும் 
அதிக அளவில் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள் என பட்டியலிடப்பட்டது. தொடர்ந்து கூட்டணி கட்சிகள் கேட்கப்பட்ட இடங்கள் தொடர்பாக திமுக தலைவரிடம் எடுத்து கூறி பதவி இடங்கள் பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு செய்யப்படும் என கூறப்பட்டது.


இதனையடுத்து உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.இந்தநிலையில்  நாளை மறுதினம் மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான தேர்தலானது நடைபெற உள்ளது.
இதில்  யாருக்கு எந்த இடங்கள் கொடுப்பது என்பது குறித்து  திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதேநேரத்தில் சேலம், காஞ்சிபுரம்,சிவகாசி ஆகிய  துணை மேயர் பதவி இடங்களும் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. மதிமுகவிற்கு ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவியும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா ஒரு துணை மேயர் பதவியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சியில் 20 மாநகராட்சி மேயர் பதவி இடங்களை திமுகவே வைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றதன் அடிப்படையில் நகராட்சி, பேரூராட்சி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

click me!