இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க... டி.டி.வி.தினகரன் தொண்டர்களுக்கு திடீர் எச்சரிக்கை..!

By vinoth kumarFirst Published Sep 13, 2019, 2:58 PM IST
Highlights

சுபஸ்ரீ நிகழ்வை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு அமமுக தொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுபஸ்ரீ நிகழ்வை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு அமமுக தொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் நிலைதடுமாறி விழுந்தார். அப்போது, அவருக்குப் பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு வைக்கும் பேனர் கலாச்சாரத்திற்கு பொதுமக்கள் மற்றும் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

அந்த வகையில், திமுக, அதிமுக ஆகிய தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் இரண்டும் இனி கட்சி தொடர்பான எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கக் கூடாது என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். 

இந்நிலையில், அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பள்ளிக்கரணையில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட ஆளுங்கட்சியினரின் விளம்பரப் பதாகை சரிந்து விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. வெளிநாடு செல்வதற்கான கனவுகளோடு தேர்வை எழுதிவிட்டு வந்த சுபஸ்ரீயை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தால் நேர்ந்திருக்கிற இந்தத் துயர விபத்துக்கு காரணமான அனைவரையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். 

அரசியல் கட்சியினர், மற்ற அமைப்பினர், தனிநபர்கள் என யாரும் மக்களுக்கு இடையூறையும் இன்னல்களையும் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற விளம்பரப் பதாகைகளை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அந்தந்தப் பகுதியில் இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் உறுதியோடு இருந்து இவற்றைத் தடுக்க வேண்டும். மேலும், பதாகை விழுந்ததால் கீழே சாய்ந்த சுபஸ்ரீ மீது கண்மூடித்தனமான வேகத்தில் வந்த லாரி மோதி உயிரைப் பறிக்க காரணமாகி இருக்கிறது. எனவே கனரக வாகனங்களின் வேகத்தைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தவும் போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

ஈடுசெய்ய முடியாத இத்தகைய உயிரிழப்புகள் இனி ஒருபோதும் நடக்காதபடி அனைத்துத் தரப்பினரும் பொறுப்போடும், சமூக அக்கறையோடும் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். துயரமான இந்த நிகழ்வை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு இனி வரும் நாட்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கழக நிகழ்ச்சிகள் எதற்கும் இதுபோன்று சாலை மையத்திலும், நடைபாதை ஓரங்களிலும் பதாகைகள் வைக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன் இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

click me!