ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா ? இன்று தீர்ப்பு !! போராட்டத்துக்கு தயாராகும் தூத்துக்குடி மக்கள் !!

By Selvanayagam PFirst Published Feb 18, 2019, 7:08 AM IST
Highlights

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதி மன்றம்  இன்று தீர்ப்பு வழங்குகிறது. மீண்டும் ஆலையை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டால் போராட்டம் நடத்த தூத்துக்குடி மக்கள் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

தூத்துக்குடியில் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய ஆவேச போராட்டத் திற்குப் பின்னர் தமிழக அரசு இந்த ஆலையை சீல் வைத்து மூடியது. 

இப்போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.ஆலை மூடப்பட்டதை எதிர்த்தும் ஆலையை செயல்படுத்த அனுமதி கோரியும் வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது.
 
இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என்று தூத்துக்குடி மக்கள் அதிர்ச்சி யடைக்கூடிய வகையில் தீர்ப்பளித்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இந்த வழக்கு  உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. எதிர்தரப்புகளின் வாதம் பிப்ரவரி 5 ஆம் தேதியன்று துவங்கி நடைபெற்றது. இந்த வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலைசெயல்படலாம் என்று அனுமதியளிக்கும் அதிகார வரம்பு தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு இல்லை என்றும் இந்த ஆலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட உயரத்திற்கு குறைவாகவே புகைபோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன; இதனால் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது என்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் விசாரணையில் முன்வைத்தனர். 

இந்த வழக்கில் தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வாதம் பிப்ரவரி 7 வியாழனன்று நிறைவுபெற்றுள்ளது.  இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை நீதிபதி ஆர்.எப்.நாரிமன் இன்று  வழங்குகிறார்.

அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்சநிதிமன்றம் உத்தரவிட்டால் அதை எதிர்த்து போராட தூத்துக்குடி மக்கள் தயாராகி வருவதாகவும் தெரிகிறது.

click me!