ஸ்டெர்லைட் ஆலைக்கு கடும் எதிர்ப்பு…. தூத்துக்குடியை மிரள வைத்த பெரும் போராட்டம் !!

First Published Mar 25, 2018, 6:56 AM IST
Highlights
sterlite protest in thoothkudi


ஸ்டெர்லைட் ஆலை விவரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டம் தூத்துக்குடியையே மிரள வைத்தது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பொது மக்கள் ஒன்று திரண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தூத்துக்குடி–மதுரை பைபாஸ் சாலையில்  ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அமைந்து உள்ளது. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம  மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி  வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி நகர பகுதியில் உள்ள சுமார் 6 ஆயிரத்து 900 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர ஸ்ரீவைகுண்டத்தில் 320 கடைகளும், ஓட்டப்பிடாரம் பகுதியில் 94 கடைகளும், புதியம்புத்தூர் பகுதியில் 600 கடைகள் உள்பட மொத்தம் சுமார் 8 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் அத்திமரப்பட்டி பகுதியில் விவசாயிகள் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்தபடி வயல்களில் வேலை செய்தனர். காலாங்கரை, குலையன்கரிசல் சுற்றுவட்டார பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி, திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 600 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தூத்துக்குடி நகரில் இயக்கப்பட்டு வந்த 47 மினி பஸ்களும் நிறுத்தப்பட்டன.

தூத்துக்குடி நகர் பகுதிகளில் உள்ள 8 தியேட்டர்களிலும் நேற்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.. இருசக்கர வாகனங்களில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஸ்டிக்கர்களையும் பொதுமக்கள் ஒட்டினர். வாகன போக்குவரத்து இல்லாததால் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்நிலையில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. எந்தவிதமான அரசியல் கட்சிகளின் பின்புலமும் இல்லாமல் நடைபெற்ற இந்த பொதகு கூட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டனர்.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என தன்னெழுச்சியாக திரண்டது தூத்துக்குடியையே மிரள வைத்தது. சென்னையில் ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டம் போன்று எழுச்சியுடன் நடைபெற்ற இந்த போராட்டம் ஆட்சியாளர்களை அதிர  வைத்துள்ளது.

click me!