ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக களம் இறங்கிய அ.தி.மு.க நிர்வாகிகள்! அதிர்ச்சியில் தூத்துக்குடி மக்கள்!

By vinoth kumarFirst Published Aug 20, 2018, 10:45 AM IST
Highlights

தமிழக அ.தி.மு.க அரசால் மூடி சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினரே தலைமைச் செயலகத்தில் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை பிற்பகலில் தலைமைச் செயலக வாயிலில் இரண்டு வேன்கள் வந்து நின்றன.

தமிழக அ.தி.மு.க அரசால் மூடி சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினரே தலைமைச் செயலகத்தில் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை பிற்பகலில் தலைமைச் செயலக வாயிலில் இரண்டு வேன்கள் வந்து நின்றன. வேன்களில் இருந்து ஆண்களும், பெண்களுமாக சுமார் 100 பேர் இறங்கி தலைமைச் செயலகத்திற்குள் சென்றனர். வேன்களையும், சரி வேன்களில் வந்தவர்களையும் சரி தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் என்ன என்று விசாரித்துவிட்டு உடனே உள்ளே அனுப்பி வைத்தனர்.

சுமார் 100 பேர் ஒரே நேரத்தில் தலைமைச் செயலகத்திற்குள் பேரணியை போல் வந்த காரணத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக செய்தியாளர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர். அப்போது ஒரு சிலர் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக முழக்கம் இட ஆரம்பித்தனர். மேலும் சிலர் கையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான ஆவணங்களை வைத்திருந்தனர். முதலமைச்சரின் தனிப்பிரிவிற்குள் சிலர் மட்டும் சென்றுவிட்டு வெளியே வந்தனர். அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பொன் ராஜ் என்பவர் பேசினார். தன்னை அ.தி.மு.க பிரமுகர் என்று அவர் கூறிக் கொண்டார். அ.தி.மு.க கரை வேஷ்டியும் அணிந்திருந்தார். இதே போல் அந்த கூட்டத்தில் மேலும் பலரும் அ.தி.மு.க. கரை வேஷ்டியுடன் இருந்தனர். தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பிரஸ்ஸின் முன்னாள் சேர்மன் என்றும் தன்னை பொன்ராஜ் கூறிக் கொண்டார்.

அப்போது பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி தலைமைச் செயலகத்தில் தூத்துக்குடி மக்கள் சார்பில் மனு அளித்துள்ளதாக கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பத்திரிகையாளர்கள் என்ன தூத்துக்குடி மக்கள் சார்பிலா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு ஆமாம், தற்போது ஆலை மூடப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள் யாருமே தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் இல்லை என்று தெரிவித்துவிட்டு சென்றார்.

 

 ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் தங்களை போன்ற பலர் வேலை வாய்ப்புகளை இழந்துவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர். ஆனால் அவர்கள் அனைவருமே யாரோ சொல்லிக் கொடுத்ததை அப்படியே கூறியது தெரிந்தது. ஏனென்றால் யாரிடம் பேசினாலும் அனைவரும் சொல்லியதையே திரும்ப திரும்ப கூறினர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக முன்னின்று மனு அளித்தவர் ஒரு அ.தி.மு.க பிரமுகர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அ.தி.மு.க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே சமயம் ஆலையை திறக்க ஸ்டெர்லைட்டும் தேசிய பசுமை தீர்ப்பாயம் மூலம் பிரம்மபிரயர்த்தன செய்து வருகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க பிரமுகர்கள் சிலர் தலைமைச் செயலகத்திற்கே சென்று ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மனு அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது அ.தி.மு.க தலைமை தற்போது வரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

click me!