ஸ்டாலினை நான் சமாளித்துவிடுவேன்! தேர்தல் வேலைய நீங்க பாருங்க! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பூஸ்ட் பேச்சு!!

By Selva KathirFirst Published Feb 5, 2019, 10:02 AM IST
Highlights

ஸ்டாலினை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துங்கள். அனைவருக்கும் வர வேண்டியது சரியான நேரத்தில் வந்து சேரும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தேர்தலில் காட்டக்கூடாது. கருத்துக்கணிப்புகளை பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். விரைவில் நமக்கு சாதகமான பல அறிவிப்புகள் வர உள்ளன.

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அம்மா பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மிகவும் நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

காலை பத்து மணிக்கு விருப்ப மனு விநியோகம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 9.50 மணிக்கெல்லாம் எடப்பாடி தலைமையகம் வந்து சேர்ந்தார். நேராக தலைமையகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா புகைப்படத்திற்கு எடப்பாடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து விருப்ப மனு விநியோகத்தை ஓ.பி.எஸ் உடன் இணைந்து எடப்பாடி துவக்கி வைத்தார். 

பின்னர் நேராக ஓ.பி.எஸ் – எடப்பாடி இணைந்து அமைச்சர் உதயகுமார் ஏற்பாடு செய்திருந்த அம்மா பேரவை நிர்வாகிகள் கூட்டத்திற்கு சென்றனர். முதலில் உதயகுமார் தான் பேசியுள்ளார். அப்போது பொங்கல் பரிசு கொடுத்தது மற்றும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் போராட்டத்தை ஒடுக்கியது போன்ற நடவடிக்கைகளால் மக்களுக்கு நம் மீது நல்ல எண்ணம் வந்துள்ளது. இதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உதயகுமார் பேசினார்.

 

அதன் பிறகு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தல் நமக்கு மிகவும் முக்கியம். அதை விட முக்கியம் நாடாளுமன்ற தேர்தலோடு வர உள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை கவனிக்க சிறப்பு குழு, சட்டப்பேரவை இடைத்தேர்தலை எதிர்கொள்ள சிறப்பு குழு அமைக்க உள்ளோம். அந்த குழுவில் இடம்பெற்றுள்ளவர்களுடன் நிர்வாகிகள் இணைந்து செயல்பட வேண்டும். கடந்த முறை எம்.பி தேர்தலில் வென்ற பலர் இன்று விருப்ப மனு கொடுக்க வரவில்லை. அவர்களுக்கு எல்லாம் நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் நாம் தான் ஜெயிப்போம். தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியை மக்கள் நம்பமாட்டார்கள். அவர்கள் மீதான வெறுப்பு இன்னும் மக்களுக்கு உள்ளது. இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஸ்டாலினை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துங்கள். அனைவருக்கும் வர வேண்டியது சரியான நேரத்தில் வந்து சேரும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தேர்தலில் காட்டக்கூடாது. கருத்துக்கணிப்புகளை பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள். விரைவில் நமக்கு சாதகமான பல அறிவிப்புகள் வர உள்ளன. தி.மு.க மூக்கின் மீது விரலை வைக்கும் அளவிற்கு நாம் கூட்டணி அமைக்க உள்ளோம்.

பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளது. ஓரிரு வாரங்களில் கூட்டணி இறுதியாகிவிடும். யாருடன் கூட்டணியாக இருந்தாலும் நமது தலைமையில் தான் கூட்டணி. நமது சுயமரியாதை மற்றும் அ.தி.மு.கவின் சுயமரியாதையை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தேர்தல் பணிகளில் நாம் தான் சிறந்தவர்கள் என்பதை காட்ட வேண்டும். தற்போது நமக்கு சவால் விடுபவர்கள் எல்லாம் தேர்தலுக்கு பிறகு இருக்கமாட்டார்கள்.

 
  
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியதாக உள்ளே இருந்தவர்கள் கூறியுள்ளனர். அவரை தொடர்ந்து பேசிய ஓ.பி.எஸ், பேச்சுக்கு பேச்சு தினகரனை தான் விளாசித்தள்ளியுள்ளார். தினகரனை தற்போது சீண்ட கூட ஆள் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்தப்போவதாக கூறிக் கொண்டிருக்கிறார். பார்க்கலாம் எப்படி அவர் டெபாசிட் வாங்குகிறார் என்று. தினகரன் உள்ளிட்டோரை நாடாளுமன்ற தேர்தலோடு ஓய்த்துவிட வேண்டும். தேர்தலுக்கு பிறகு எப்போதும் போல் தமிழகத்தில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க தான் இருக்கும். இவ்வாறு ஓ.பி.எஸ் பேசியதாக கூறுகிறார்கள்.

click me!