சங்பரிவார் சொன்னால் ஸ்டாலின் அரசு கேட்டுக்கொள்கிறது.. வேண்டாம் வம்பு.. தமிழக அரசை எச்சரித்த தவ்ஹித் ஜமாத்.

Published : Mar 21, 2022, 11:49 AM IST
சங்பரிவார் சொன்னால் ஸ்டாலின் அரசு கேட்டுக்கொள்கிறது.. வேண்டாம் வம்பு.. தமிழக அரசை எச்சரித்த தவ்ஹித் ஜமாத்.

சுருக்கம்

ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவாரக் கும்பல்களின் ரத்தக்கரை படிந்த வரலாற்றையும் மக்கள் அறிவார்கள். லாவண்யா மரணத்தை வைத்து தமிழகத்தில் அவர்கள் நகர்த்திய அரசியலை மக்கள் புரிந்து கொண்டதால் தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை வைத்து கேவலமான அரசியல் செய்யும் பாஜகவின் தந்திரம் தமிழகத்தில் பலிக்கப் போவதில்லை . 

சங்பரிவாரக் கும்பல்களின் அரசியல் அழுத்தத்திற்கு ஏற்ப இஸ்லாமியர்களை கைது செய்வது ஏற்புடையது அல்ல, இது முஸ்லிம்களிடம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழக அரசை எச்சரித்துள்ளது. ஹிஜாப் தடை எதிர்ப்பு போராட்டத்தில் பேசிய  தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் ஜமால் உஸ்மானி மற்றும் கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தவ்ஹீத் ஜமாத் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் பின்வருமாறு:-

ஹிஜாப் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய சட்டத்திற்குப் புறம்பான அநீதியான தீர்ப்பை எதிர்த்து தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போராட்டங்களில் பங்கேற்று பேசிய சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர்களான ஜமால் உஸ்மானி மற்றும் கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கோவை ரஹ்மத்துல்லா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேடப்படும் குற்றவாளி என்பது போல சித்தரித்த காரணத்தால்தான் தேடப்படும் நிலையில் இல்லை நானே நேரில் வந்து கைதாகிறேன் என்று கைதாகியுள்ளார். அமைதி வழியில் போராடும் நபர்கள் மீது கடுமையான வழக்கு தொடுப்பது கைது நடவடிக்கையை மேற்கொள்வது ஜனநாயகத்தின் குரலை நசுக்கும் செயலாகும்.

வன்முறை பேச்சை எப்போதும் தவ்ஹீத் ஜமாத் ஆதரிப்பதில்லை, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் சாலை மறியலில்கூட தவ்ஹீத் ஜமாத் ஈடுபடுவதில்லை. குறிப்பிட்ட பேச்சு தவறாக புரிந்து கொள்ளும்படி அமைந்துவிட்டது எனினும் சங்பரிவார கும்பல் இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு மத விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். சங்பரிவாரக் கும்பல்களின் அரசியல் அழுத்தத்திற்கு ஏற்ப அரசின் புறத்திலிருந்து இத்தகைய கைது நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல. இது முஸ்லிம்களிடம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் நீண்ட காலம் தடை செய்யப்பட்டிருந்த ஆர்எஸ்எஸ் இயக்க ஆதரவாளர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை குற்றம் சொல்லி குரல் எழுப்புவது நகைப்பிற்குரியது. தவ்ஹீத் ஜமாத்தின் மனிதநேய பணிகள், ரத்ததானம் பேரிடர் கால பொதுச்சேவைகள் உள்ளிட்டவைகளை மக்கள் அறிந்ததே.

ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவாரக் கும்பல்களின் ரத்தக்கரை படிந்த வரலாற்றையும் மக்கள் அறிவார்கள். லாவண்யா மரணத்தை வைத்து தமிழகத்தில் அவர்கள் நகர்த்திய அரசியலை மக்கள் புரிந்து கொண்டதால் தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை வைத்து கேவலமான அரசியல் செய்யும் பாஜகவின் தந்திரம் தமிழகத்தில் பலிக்கப் போவதில்லை.

நீதிமன்றத்தை கொச்சை வார்த்தைகளில் விமர்சித்த எச்.ராஜா, மற்றவர்களின் காலைப்பிடித்து தான் நீதிபதிகள் உயர் பொறுப்புக்கு வருகிறார்கள் என்று பேசியது ஆடிட்டர் குருமூர்த்தி, பத்திரிக்கையாளர்களை ஆபாச வார்த்தைகளால் பேசிய எஸ்.வி சேகர் போன்றவர்களைப் போல் வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுவதில்லை. தமிழக பாஜக தலைவர்கள் இந்த பிரச்சினையை கையில் எடுத்து  பரபரப்பு தேடுவதில் இருந்து அவர்களுக்கு இங்கு வேறு அரசியல் இல்லை என்பதை காட்டுகிறது.

இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராகவும், கோட்சேவுக்கு ஆதரவாகவும் ஈடுபடும் சங்க பரிவாரங்கள் போன்று வெறுப்பு அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு இல்லை. கைது நடவடிக்கைகளை கண்டு தவ்ஹீத் ஜமாஅத் ஒருபோதும் அஞ்சாது, சட்டத்தின் அடிப்படையில் இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?