மத்திய அரசின் தூக்கத்தை கலைத்த முதல்வர் ஸ்டாலின்.. சட்டசபையை குலுங்க வைத்த அந்த அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jun 23, 2021, 9:43 AM IST
Highlights

வேளாண் மக்களின் நெடுங் கால கோரிக்கையான வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதாக கூறியிருபப்பதை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தினர் சார்பாகவும், விவசாய பெருங்குடிகள் சார்பாகவும் மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது என்றார்.

முதல்வரின் அறிவிப்பை வரவேற்கும் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் 16 வது சட்டமன்ற முதல் கூட்டத் தொடர் இரண்டாவது நாள் நேற்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் கூடியது. முதலில் மறைந்த முன்னாள் பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் திரைப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு வகையில் தமிழ்ச் சமூகத்திற்கு பங்காற்றி மறைந்தவர்களுக்கான இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது, பின்னர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் வாசிக்கப்பட்டு விவாதம் தொடங்கியது.

அப்போது பேசிய மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து குறுக்கிட்டு பேசிய தமிழக முதல்வர் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறக் கோரியும் ம குடியுரிமை   திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார், மேலும் இது முதல் கூட்டத்தொடர் என்பதால் மரபு மீறல் ஆக மாறி விடக்கூடாது என்பதற்காக இன்னும் ஒரு மாதத்தில் நடைபெறவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

இதுகுறித்து பேட்டியளித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, சமூக நீதி மாறாமல் ஆட்சி செய்து வரும் திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட நாள் கோரிக்கையான குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து அறிவிப்பு வெளியிட்டிருப்பதும், வேளாண் மக்களின் நெடுங் கால கோரிக்கையான வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதாக கூறியிருபப்பதை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தினர் சார்பாகவும், விவசாய பெருங்குடிகள் சார்பாகவும் மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது என்றார்.

அதனைத் தொடர்ந்து பேட்டியளித்த தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நீண்ட காலமாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர் என்ற பார்வையிலிருந்து பார்க்கும் போதும், வேளாண் குடியை சேர்ந்த வேளாண் மக்களுக்காக களத்தில் போராடிய பெண் என்ற நிலையில் இருந்து பார்க்கும் போதும், இந்த இரண்டு அறிவிப்புகளுமே சிறுபான்மை சமூகத்தினர் இடையேயும், வேளாண் பெருங்குடி மக்களாலும் பெரிதும் போற்றப்படும் கூடிய அறிவிப்பாக இருக்கிறது என்றார். மேலும் இது அம்மக்களின் வயிற்றில் பால்வார்க்கும் அறிவிப்பு எனவும் வரவேற்றார்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற தலைவர் செல்வபெருந்தகை, எங்கள் தேசியத் தலைவர் ராகுல் காந்தியின் நாடு தழுவிய அளவில் ஏற்கனவே வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு தொடர்ந்து நாங்கள் கோரிக்கை வைத்ததன் பேரில் அதனை திரும்பப் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும், இஸ்லாமிய சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், முதல்வர் அறிவித்திருக்கும் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி மனதார வரவேற்கிறது உளமாரப் பாராட்டுகிறேன் என்றார்.
 

click me!