அடுத்ததாக ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்….எடப்பாடியாருக்கு  தொடரும் நெருக்கடி !!!

First Published Sep 8, 2017, 6:56 AM IST
Highlights
staline wil meet governer


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மெஜாரிட்டி இழந்துவிட்டதால் உடனே சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வரும் ஞாயிற்றுக் கிழமை நாளை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்தித்து வலியுறுத்த உள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.இதையடுத்து திமுக செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின் உடனே சட்டமன்றத்தை கூட்டி எடப்பாடி மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

கடந்த மாதம் 27-ந்தேதி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி , முகமது அபுபக்கர்  உள்ளிட்டோர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு அளித்தனர்.

தி.மு.க.வை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி தலைவர்களும் கடந்த 30-ந்தேதி கவர்னரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

ஆனால், இது உட்கட்சி விவகாரம் என்றும் இதற்கு சட்டத்தில் இடமில்லை என்றும்  கவர்னர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை இழந்து விட்டதால் சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று டி,டி,வி. தினகரன் தலைமையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் நேற்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.

இப்படி அரசியல் கட்சிகள் தொடர்ந்து ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் , எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் கவர்னரை சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக  வரும் ஞாயிற்றுக்கிழமை , கவர்னரை சந்திக்க நேரம் கேட்டு தி.மு.க. சார்பில் கவர்னர் மாளிகையில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் மாலை 5 மணிக்கு அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை தெரிவித்தது. இப்பிரச்சனையில் தொடர்ந்து ஆளுநருக்கு அழுத்தம் தரப்படுவதால், எடப்பாடியாருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

 

 

click me!