
எம்எல்ஏ சீட்டுக்கு பணம் வாங்கி மோசடியில் ஓரம் கட்டப்பட்டவர்தான் ஓபிஎஸ்….போட்டுத்தாக்கும் ஸ்டாலின்….
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலின்போது அதிமுகவில் எம்எல்ஏ சீட்டு வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்டவர்தான் ஓபிஎஸ் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டம் புது வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது.
அதில் பேசிய மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தின்போது ஒன்றாக இருந்தவர்கள், ஓரணியாக இருந்தவர்கள், கோடிகோடியாக கொள்ளை அடித்தவர்கள், தமிழகத்தை குட்டிச்சுவராக்கியவர்கள் இப்போது பிரிந்து நிற்கிறார்கள் என்று தெரிவித்தார்.
ஒரு அணி பெரா மாபியா அணியாகவும், மணல் மாபியா சேகர் ரெட்டி இன்னொரு அணியாகவும் மக்களை ஏமாற்ற இந்த தொகுதிக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆர்.கே.தொகுதி மக்கள் இந்த இரு மாபியாக்களை கண்டு ஏமாற மாட்டார்கள் என தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விசாரணை கமிஷன்வேண்டும் என்று தற்போது புலம்பும் ஓபிஎஸ், 4 மாதங்கள் பொறுப்பு முதலமைச்சராக இருந்த போது , ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது விசாரணை கமிஷன் அமைப்போம் என்று கூறியதுண்டா என கேள்வி எழுப்பினார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேர்தலின்போது, எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்து ஓரங்கட்டப்பட்டவர் தான் ஓபிஎஸ் என்றும் அதன்பிறகு சமாதானமாகி எப்படியோ வந்து விட்டார்.எனவும் கடுமையாக பேசினார்.