‘கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவே ஸ்டாலின் வெளிநாடு போயிருக்கிறார்’..! பகீர் கிளப்பும் இபிஎஸ்..!

Published : Sep 03, 2025, 08:26 PM IST
Edappadi Palaniswami

சுருக்கம்

ஏற்கனவே அதிமுக ஆட்சியில் அமைந்த தொழிற்சாலையை விரிவுபடுத்த ஜெர்மனிக்குச் சென்று ஒப்பந்தம் போடுகிறார்கள். ஒரே ஒரு நிறுவனத்துடன் ஆயிரம் கோடியில் புதிய ஒப்பந்தம் போட்டுள்ளனர். இப்படி மக்களை ஏமாற்றி ஈர்ப்பதாகச் சொல்லி பொய் செய்தி வெளியிடுகிறார்கள்

‘‘இப்போது ஸ்டாலின் வெளிநாடு போய்விட்டார். அவர் தொழில் முதலீட்டை ஈர்க்கப் போகவில்லை இங்கு கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யப் போயிருக்கிறார்’’ என எடப்பாடி பழனிசாமி பகீர் குற்றச்சாட்டை கிளப்பி உள்ளார்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று மதுரை மேற்கு தொகுதியில் பேசினார். அப்போது அவர், ‘‘கடந்த தேர்தலில் மதுரை மாவட்டத்தில் ஒருசில தொகுதிகளில் திமுக சூழ்ச்சி செய்து வென்றுள்ளது. ஆனால் அடுத்தாண்டு தேர்தலில் மதுரையின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும். கூட்டணிக் கட்சிகள் மூலம் வென்றுவிடுவோம் என்று ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். இந்த திமுக ஆட்சியில் மக்கள் பட்ட துன்பம் ஏராளம். அவை எல்லாமே தேர்தலில் பிரதிபலித்து படுதோல்வி அடைவார். அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும். அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.

எல்லா துறைகளிலும் ஊழல் என்பதற்கு மதுரை மாநகராட்சியே ஒரு உதாரணம். நீங்கள் செலுத்தும் வரியெல்லாம் தனி நபருக்குச் செல்கிறது, திமுகவினருக்குச் செல்கிறது. மதுரை மாநகராட்சியில் ஆளுங்கட்சி மேயர் முறைகேடு 200 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக செய்தி வந்தது. இந்த அரசே விசாரித்து மண்டல குழு தலைவர்கள் 5 பேர் ராஜினாமா செய்துள்ளனர். வரிக்குழு, நகரமைப்பு குழு தலைவர் ராஜினாமா செய்துள்ளனர், அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேயரை கைது செய்யவில்லை, அவரது கணவரை மட்டும் கைது செய்தனர். இதற்கு யார் பொறுப்பு? மேயர் தானே, அவரை கைது செய்யவில்லை. அவரது கணவரையும் சாதாரண செக்‌ஷன்களில் கைதுசெய்து திமுக கண் துடைப்பு நாடகம் நடத்துகிறது. அடுத்தாண்டு அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த ஊழல் முழுமையாக விசாரிக்கப்பட்டு, மக்களின் வரிப்பணம் ஒரு ரூபாய் கூட வீணாகாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றத்தான் வரி போடுகிறார்கள். அந்த வரி வசூல் பணத்தை இவர்கள் கொள்ளையடிக்கிறார்கள். பின்னர் மாநகராட்சிக்கு பணம் தேவை என்பதால் 260 கோடி ரூபாய் கடன் வாங்குகிறார்கள். இந்த கடனை யார் கட்டுவது? அதற்கும் வரி போடுவார்கள். இதுதான் ஊழல் அரசு என்பதற்கு சான்று. இங்கு மட்டுமல்ல கோவையிலும் மேயரை மாற்றிவிட்டனர், காஞ்சிபுரத்திலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம், நெல்லையிலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தனர். எல்லாம் பங்கு பிரிப்பதில் பிரச்னை. அதனால்தான் இப்படிப்பட்ட நிகழ்வு நடக்கிறது. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசாங்கம் தான். அன்று முதல் இன்று வரை ஊழல் தொடர்கிறது. 2026 தேர்தல் ஊழல் அரசுக்கு முடிவுகட்டும் தேர்தலாக இருக்க வேண்டும்.

டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாகப் பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி, மாதத்துக்கு 450 கோடி, வருடத்துக்கு 5400 கோடி என்று, இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். கூடுதலாக பெறும் தொகை முழுக்க மேலிடம் செல்வதாக தகவல். வெட்டவெளிச்சமாக 10 ரூபாய் அதிகம் வசூலிப்பது எல்லோருக்கும் தெரியும். இதற்குப் பின்னே இவ்வளவு பெரிய மெகா ஊழல் நடந்துள்ளது.

அமலாக்கத்துறை விசாரணையில் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கும் என்று செய்தி வந்திருக்கிறது. இந்த ஒரு துறையில் மட்டும் இவ்வளவு பணம் என்றால் மற்ற துறைகளை நினைத்துப் பாருங்கள். இவ்வளவு பணமும் எங்கே போகிறது..? இப்போது ஸ்டாலின் வெளிநாடு போய்விட்டார். அவர் தொழில் முதலீட்டை ஈர்க்கப் போகவில்லை இங்கு கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யப் போயிருக்கிறார்.

ஜெர்மனில் 3200 கோடி ரூபாய் ஈர்த்ததாகச் செய்தி, ஏற்கனவே அதிமுக ஆட்சியில் அமைந்த தொழிற்சாலையை விரிவுபடுத்த ஜெர்மனிக்குச் சென்று ஒப்பந்தம் போடுகிறார்கள். ஒரே ஒரு நிறுவனத்துடன் ஆயிரம் கோடியில் புதிய ஒப்பந்தம் போட்டுள்ளனர். இப்படி மக்களை ஏமாற்றி ஈர்ப்பதாகச் சொல்லி பொய் செய்தி வெளியிடுகிறார்கள்.

திமுக அரசால் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 10% கூட நடைமுறைக்கு வரவில்லை. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் ஒப்பந்தம் போட்ட தொழில்கள் தான் நடைமுறைக்கு வந்துள்ளது, அதன் மூலமே வேலைவாய்ப்பு கிடைத்து பொருளாதாரம் பெருகியுள்ளது இதுதான் உண்மை. திமுக சொல்வது அத்தனையும் பொய். 2ஜி ஸ்பெட்ரம் ஊழல் உங்களுக்குத் தெரியும். கண்ணுக்குத் தெரியாத காற்றில்கூட ஊழல் செய்யும் ஒரே கட்சி திமுக. தமிழ்நாட்டு பெயரையே அசிங்கப்படுத்திவிட்டனர், டெல்லியில் தலைகுனியும் அவலம் ஏற்பட்டது. திமுக அமைச்சர் சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார். இந்தியா முழுவதும் திமுகவினால் தமிழ்நாட்டுக்கு கெட்டபெயர். விஞ்ஞான முறையில் ஊழல் செய்வது இதுதான்’’ எனத் தெரிவித்தார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ்.. புதிய முதலமைச்சர் யார் தெரியுமா? முழு விவரம்!
ஊராட்சி செயலாளர்களை ஏமாற்றிய தமிழக அரசு..! தவிடுபொடியாகும் திமுகவின் தேர்தல் வியூகங்கள்..!