நீங்களும் ரிசைன் பண்ணுங்க…நானும் ரிசைன் பண்ணுறேன்… ஒரே தொகுதியில் போட்டியிட தயாரா ? எடப்பாடிக்கு சவால்விட்ட ஸ்டாலின் !!

By Selvanayagam PFirst Published Oct 17, 2019, 7:47 AM IST
Highlights

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட தயாரா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ரெட்டியார்பட்டியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர்  வாக்காளர்களிடையே பேசினார். 

அப்போது தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சி மத்திய அரசுக்கு எடுபிடியாக செயல்பட்டு வருகிறது. இதை சொன்னால் அவர் கோப ப்படுகிறார். அதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். ‘நீட்’ தேர்வை கருணாநிதி ஆட்சி காலத்தில் மத்திய அரசு கொண்டு வர முயற்சி செய்தது. இதற்கு கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றார்.

அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜெயலலிதா முதலமைச்சரானார். ஆனால். அவரும் ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் முதலமைச்சராக  இருந்த வரை ‘நீட்’ தேர்வு தமிழ்நாட்டில் நுழைய முடியவில்லை. தற்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ‘நீட்’ தேர்வு தமிழகத்தில் நுழைந்து விட்டது. அப்படி என்றால் இது பா.ஜனதாவுக்கு அடிமை ஆட்சி இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

சுவிஸ் வங்கியில் நான் பணம் வைத்து இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதை நிரூபித்தால் நான் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார். ஏன் அரசியலை விட்டே விலக தயார் என்று கூறினேன். நிரூபிக்க முடியாவிட்டால் எடப்பாடி பழனிசாமி ஊரை விட்டு ஓட வேண்டும் என்று கூறினேன். நான் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை என கிண்டல் செய்தார்.

எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதலமைச்சர்  என்கிறார். எம்.ஜி.ஆர்., பேரறிஞர் அண்ணா, பக்தவச்சலம், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தான் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதலமைச்சர்கள். இவர் விபத்தில் வந்த முதலமைச்சர்.  இதை சொன்னால் அவர் என்னை பற்றி ஆவேசமாக பேசுகிறார். தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்கிறார்.

நான் மற்றொரு சவால் விடுகிறேன். எடப்பாடி பழனிசாமி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒரு தொகுதியில் போட்டியிடட்டும், நானும் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு அதே தொகுதியில் போட்டியிடுகிறேன். என்னுடன் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தயாரா?. அப்போது தெரியும் மக்களின் முதலமைச்சர் யார் என்று என ஸ்டாலின் கடுமையாக பேசினார்..

click me!