
தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
ஊழலில் ஈடுபடும் மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சர்களை தண்டிக்கும் லோக்பால் சட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் காரணமாக இச்சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
மாநிலம் முழுவதும் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது. ஆனால் இவ்வமைப்புக்கு தலைவர்கள் நியமிக்கப்படவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், லோக்பால் சட்டத்தையும், லோக் பால் நியமனங்களையும் அமைக்காமல் காலம் தாழ்த்துவது எந்தவிதத்திலும் நியாயம் ஆகாது என்று கூறியிருந்தது.
இந்தச் சூழலில் தமிழகத்தில் நிலவும் ஊழல்களைத் தடுக்க லோக் ஆயுக்தாவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவாழ்வில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி, ஜனநாயகம் அருகிக் கொண்டே செல்கிறது.
ஊழலை ஒழிப்போம் என ஆர்வமாகக் கூறும் மத்திய அரசு லோக் ஆயுக்தாவை ஏன் இதுவரை அமைக்கவில்லை. மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க தமிழக அரசு முன்வர வேண்டும்" இவ்வாறு மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.