ஆ ஊன்னா ஐடி ரெய்டு... காரியம் சாதிக்க மிரட்டிவைக்கும் யுக்தி! உங்க மிரட்டல் எனக்கு தெரியாதா லிஸ்ட் போட்ட ஸ்டாலின்

First Published Jul 20, 2018, 9:12 AM IST
Highlights
stalin statements against bjp it raid attack to admk


முதலமைச்சரின் சம்பந்தியின் நிறுவனங்களில் பார்ட்னராக இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் டெண்டர்களை முதலமைச்சரின் துறையிலேயே எடுத்த ஒப்பந்ததாரர் நாகராஜன் செய்யாதுரை வீட்டிலும், அலுவலகங்களிலும் 180 கோடி ரூபாய்க்கு மேல் பணமும், 100 கிலோவிற்கு மேல் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் உதவியாளர் வீடுகளில் இருந்து எல்லாம் ஆவணங்களும், பணமும் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. ஜூலை 16 ஆம் தேதி தொடங்கிய "ரெய்டு" இன்னும் முடிவுக்கு வராமல் தொடருகிறது.

இந்நிலையில் மூன்று நாள் மவுனத்தைக் கலைத்திருக்கும் முதலமைச்சர், “வரி கட்டாத, வரி ஏய்ப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்துவது வழக்கமான ஒன்றுதான்” என்றும், “எனக்கு தமிழ்நாடு முழுவதும் உறவினர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள்” என்றும் ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே என்ற கட்டாயத்தில் கூறியிருக்கிறார்.

ஆனால் முதலமைச்சரின் சம்பந்திக்கும், அவர் பார்ட்னராக இருக்கும் நிறுவனங்களுக்கும் தனது துறையிலிருக்கும் டெண்டர்களை கொடுத்தது ஏன் என்பதற்கு குறிப்பிட்டு எந்த விளக்கத்தையும் முதல்வரால் சொல்ல முடியவில்லை.

முதலமைச்சர் தனது குடும்பத்திற்குள் ஒருவருக்கு தன் துறை டெண்டர்களை வழங்கியதுதான் ஊழலின் துவக்கம். அதற்கு முதலமைச்சரிடமிருந்து நேரடியாக எந்த பதிலும் இல்லை. வரி கட்டாதவர்கள் வீட்டில் ரெய்டு நடக்கும் என்றால் ஒப்பந்ததாரருக்கு காசோலை மூலம்தான் நெடுஞ்சாலைத் துறை பணம் வழங்குகிறது.

பிறகு கான்டிராக்டரிடம் 180 கோடி ரூபாய் பணம் கட்டுக்கட்டாக சிக்கியது எப்படி? இதற்கும் முதலமைச்சரிடமிருந்து நேரடியாக பதில் இல்லை. ஆகவே மிக முக்கியமான இதற்கெல்லாம் வருமான வரித்துறையிடமிருந்தாவது உரிய பதிலை நாடு எதிர்பார்க்கிறது.

இதுவரை தமிழ்நாட்டில் அதிமுக அமைச்சர்கள் மீதும், அதிமுக ஆட்சியில் உள்ள அதிகாரிகள் மீதும் பல முறை வருமான வரித்துறை ரெய்டுகள் நடைபெற்றுள்ளன. அரவக்குறிச்சி தேர்தலின்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான கரூர் அன்புநாதன் வீட்டில் 22.4.2016 அன்று வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. 4.77 கோடி ரூபாய் ரொக்கம், 1.30 கோடி ரூபாய் மதிப்புள்ள சேலை வாங்கிய கணக்குகள், பணம் எண்ணும் மெஷின்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டன. ஏறக்குறைய 27 மாதங்களாகியும் இன்றுவரை அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்றே தெரியவில்லை.

12.9.2016 அன்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி ஆகியோர் மீது ரெய்டு நடத்தப்பட்டது. 22 மாதங்களுக்கு மேலாகியும் அந்த ரெய்டுகளில் எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைகள் என்னவென்றே தெரியவில்லை.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மணல் கூட்டாளி சேகர் ரெட்டி வீடு, அலுவலகங்களில் 9.12.2016 அன்று வருமான வரித்துறை ரெய்டு செய்தது. அந்த வழக்கிலும் 19 மாதங்கள் ஆகியும் மேல் நடவடிக்கை என்னவென்று தெரியாமல் இன்னும் சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை ஆகிய அனைத்து துறைகளுமே கண்ணாமூச்சி விளையாட்டு நடத்திக் கொண்டிருக்கின்றன.

அதிமுக அரசின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்த ராம்மோகன் ராவ் ஐ.ஏ.எஸ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் 21.12.2016 அன்று ரெய்டு நடந்தது. 19 மாதங்கள் ஆன பிறகும் இன்றுவரை அவர் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

12.4.2017 அன்று நடைபெறவிருந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்கள் என்று 32 இடங்களில் 7.4.2017 அன்று வருமான வரித்துறை ரெய்டு செய்தது.

குவாரியில் மட்டும் 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு என்று செய்திகள் வந்தது. எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பத்து அமைச்சர்கள் மற்றும் ராஜ்ய சபை உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் கொடுத்த பட்டியல் கைப்பற்றப்பட்டது.

இதனால் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் இடைத் தேர்தல் நடந்து முடிந்து இப்போது ஏழு மாதங்கள் ஆகி விட்டது. ஆனால் ரெய்டு செய்யப்பட்டு 15 மாதங்கள் உருண்டோடி விட்ட நிலையிலும் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

1800க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்து தமிழ்நாடு முழுவதும் சசிகலாவின் உறவினர்கள் வீட்டில் 8.11.2017 அன்று “மெகா ரெய்டு” நடத்தப்பட்டது. 8 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை நடவடிக்கை இல்லை. போயஸ் கார்டனில் 17.11.2017 அன்று ரெய்டு நடந்தது. மேல் நடவடிக்கை இல்லை.

இதுவரை நடைபெற்றுள்ள வருமான வரித்துறை சோதனைகளில் சிக்கிய தகவல்களின் அடிப்படையில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது ஊழலுக்கும், சொத்து குவிப்பிற்கும் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக ஊழல் தடுப்பு இயக்குனரகத்திற்கோ அல்லது சி.பி.ஐ.க்கோ ஏன் வருமான வரித்துறை அறிக்கைகளை அனுப்பாமல் தாமதம் செய்கிறது என்பது புதிராகவும், மர்மத் தொடர்கதை போலவும் நீடிக்கிறது.

இதுவரை நடைபெற்றுள்ள வருமான வரித்துறை ரெய்டுகள் அனைத்தும் என்ன நோக்கத்திற்காக நடத்தப்பட்டது? நேர்மையான நடவடிக்கைகளுக்காகவா?

அல்லது மத்திய அரசில் உள்ள பா.ஜ.க.வின் அரசியல் லாபத்திற்காக வருமான வரித்துறை பயன்படுத்தப்படுகிறதா என்ற நியாயமான கேள்வி தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது. “ரெய்டும்” “கிடப்பில் போடுவதும்” மட்டுமே அதிமுக அமைச்சர்கள் விஷயத்தில் மத்திய பா.ஜ.க. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறையின் நடவடிக்கையாக தொடருவது நேர்மையான அரசியலின் பாதை அல்ல! நாட்டு மக்களின் சந்தேகத்தைப் போக்கிடும் வகையில் விளக்கம் அளித்திட வேண்டிய கடமையும் பொறுப்பும் மத்திய பாஜக அரசுக்கும் இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்.

ஆகவே இதுவரை அதிமுக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், பல்கலைக்கழகத் துணை வேந்தர், அரசு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மேயரின் உறவினர்கள், தற்போது முதலமைச்சரின் சம்பந்தி நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தில் உள்ள பார்ட்னர் வீட்டில் நடைபெற்றுள்ள ரெய்டுகள் அனைத்திலும் வருமான வரித்துறை விசாரணையை இறுதி செய்து, ஊழல் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டிய “பொது ஊழியர்கள் மற்றும் தொடர்புடையவர்கள்” குறித்த பட்டியலை உடனடியாக ஊழல் தடுப்பு இயக்குனரகத்திற்கோ அல்லது சி.பி.ஐ.க்கோ அனுப்பிட வேண்டும் என்றும், மேலும் காலம் தாழ்த்துவது “ரெய்டுகள்” மீதே அழிக்க முடியாத களங்கத்தையும் வருமான வரித்துறையின் நம்பகத்தன்மையில் பெரும் சேதாரத்தையும் ஏற்படுத்தி விடும் என்றும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

click me!