உள்ளாட்சித் தேர்தல் எப்பத்தான் நடக்கும் ! திரும்பத் திரும்பத் அவகாசம் கேட்பது நியாமா ? தமிழக அரசு மீது பாய்ந்த ஸ்டாலின் !!

By Selvanayagam PFirst Published Jul 15, 2019, 10:24 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் கட்டளையிட வேண்டும் என மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த  அக்டோபர் 31-ம் தேதி வரை மேலும் கால அவகாசம் வேண்டும்” என்று தமிழ்நாடு மாநிலத்  தேர்தல் ஆணையத்தின் சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் கேட்டிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதை மாநிலத் தேர்தல் ஆணையம் என்றழைப்பதை விட, மாநில அவகாச ஆணையம் என்றே அழைக்கலாம் போலிருக்கிறது. 
அவகாசம் கேட்டுக் கொண்டே இருப்பதற்கு ஓர் ஆணையம் தேவைதானா, ஒன்றும் செய்யாமல் மக்கள் வரிப் பணத்தைச் செலவிட்டுக் கொண்டிருப்பதற்கு ஓர் ஆணையமா என்ற கேள்விகள் எழுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 2016ல் நடத்தி முடிக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மாநில அரசும், மாநிலத்  தேர்தல் ஆணையமும் மாறி மாறி,  கால அவகாசம் கேட்டுக் கொண்டிருப்பது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தையே கேலிக்குரியதாக்கும் கேடு கெட்ட செயல் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்கும் மாநில தேர்தல் ஆணையரிடம், ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும்.

அரசியல் சட்ட பிரிவின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் உரிய கட்டளையை பிறப்பிக்க வேண்டும் என ஸ்டாலின் தனது அறிக்கையில்  கூறியுள்ளார்.

click me!