நாங்க மிட்டாய் கொடுத்து ஜெயிச்சோம்னா நீங்க அல்வா கொடுத்தா ஜெயிச்சீங்க ? தேனியில் ஸ்டாலின் ஆவேச பேச்சு !!

By Selvanayagam PFirst Published Jul 22, 2019, 9:01 AM IST
Highlights

38 தொகுதிகளில் நாங்கள் மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றோம் என்றால் தேனியில் நீங்கள் அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா? என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக 38 தொகுதிகளில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றுள்ளதாகவும், சிறு பிள்ளைகளுக்கு மிட்டாய்  கொடுத்து ஏமாற்றுவது போல் தமிழக மக்களை ஏமாற்றி திமக ஜெயித்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேனி அருகே உள்ள வீரபாண்டியில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் திமுக வில் இணையும் விழா மற்றும் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், சென்னையில் தங்க தமிழ்செல்வன் தி.மு.க.வில் இணைந்தார். 

அவரோடு சேர்ந்து இன்றைக்கு ஆயிரக்கணக்கில் இங்கே நீங்கள் எல்லாம் வந்து சேர்ந்து இருக்கிறீர்கள். வரவேண்டிய இடத்துக்கு தான் வந்திருக்கிறீர்கள். தங்க தமிழ்செல்வனை ரொம்ப நாளாகவே எப்படியாவது தூண்டில்போட்டு இழுத்துவிடலாம் என்று முயற்சியில் நாங்கள் ஈடுபட்டது உண்டு. அப்போது அவர் மாட்டவில்லை. ஆனால், இப்போது மாட்டிவிட்டார் என தெரிவித்தார்.

இந்த தேர்தலில் தி.மு.க. மக்களிடம் பொய்யான வாக்குறுதி தந்து, அதையும் தாண்டி மக்களை மிட்டாய் கொடுத்து ஏமாற்றி ஓட்டு வாங்கிவிட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

38 தொகுதிகளில் நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றி வெற்றி பெற்றோம் என்றால், நீங்கள் ஒரு தொகுதியில் (தேனி) வெற்றி பெற்று இருக்கிறீர்களே. நீங்கள் அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா? தமிழக மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்-அமைச்சர் பேசலாமா?  என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தி.மு.க. முறையாக தேர்தலை சந்தித்து 234 தொகுதிகளில் குறைந்தபட்சம் 200 தொகுதிகளிலாவது வெற்றி பெற்று கம்பீரமாக ஆட்சி அமைக்கும். இன்றைக்கு இருக்கும் ஆட்சி இன்றைக்கா, நாளைக்கா என கோமா நிலையில் உள்ளது.

தமிழக மக்களுக்கு நாங்கள் கொடுத்து இருப்பது வாக்குறுதி. இன்று இல்லை என்றாலும் நாளை தி.மு.க. தானே ஆட்சிக்கு வரப்போகிறது. தேர்தல் நேரத்தில் தந்துள்ள அத்தனை உறுதிமொழிகளையும், மீண்டும் தேர்தல் நேரத்தில் தரப்போகும் அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றியே தீருவோம் என ஸ்டாலின் பேசினார்..
 

click me!